மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

எனது தலைமையில் சின்னத்தை மீட்போம்: தீபா

எனது தலைமையில் சின்னத்தை மீட்போம்: தீபா

தனது தலைமையில் சின்னத்தை மீட்டுக் கட்சியைக் காப்போம் என்றும், ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளைத் தொண்டர்கள் ஆதரவுடன் தொடரப்போவது உறுதி என்றும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

தற்போது அதிமுக-வில் ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. புதிய நிர்வாகிகளை அறிவித்த தினகரனை நீக்கம் செய்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தினகரன், “தீர்மானம் குறித்து யாரவது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால், முதல்வர், அமைச்சர்கள் பதவியிழக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தினகரன் நீக்கப்பட்டதால் அதிமுக-வின் இரு அணிகளும் விரைவில் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்துவந்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நேற்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சசிகலா மற்றும் தினகரனை ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி அணி, ஜெயலலிதா மரணத்துக்கு நியாயம் கேட்கப் புறப்பட்டதாக கதைவிட்ட பன்னீர்செல்வம் அணி, இந்தக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்த மன்னார்குடி கூட்டம் என அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் இரு அணியினரும் கொடுத்துள்ள பிரமாண பத்திரம் போலியானது என்று அவர்களே மாறி மாறி கூறியுள்ளனர். நாங்கள் 5.52 லட்சம் தொண்டர்கள் கையெழுத்திட்ட உண்மையான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் ஆணையமே நடத்த வேண்டும் எனவும் வழக்குத் தொடர்ந்துள்ளோம். இணைப்பு என்ற நாடகத்தை நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது.

எனவே, அதிமுக இரட்டை இலை சின்னத்தை எனது தலைமையில் மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்பாற்றுவோம். மேலும், ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகள் எனது தலைமையில் தொடரப்போவது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது