மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஆடியும் ஆண்டாளும்...

 ஆடியும்  ஆண்டாளும்...

ஆடி மாதம்….

ஆடி என்பது. மழையின் துவக்கம், துளிர்த்தலின் துவக்கம்… ஆடி முதல் நாளை மாபெரும் விழாவாகக் கொண்டாடிய தமிழ் வழக்கம் இன்று தடுமாறி நிற்கிறது. ஆடிப் பெருக்குக் கொண்டாட்டங்கள் இன்று அனேகமாக குறைந்துவிட்டன. ஆனாலும் ஆடியின் பெருமைகள் குறையவில்லை.

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடியில்தான் காற்றடிக்கத் தொடங்குகிறது. ஆடியில்தான் பூமி பாடத் தொடங்குகிறது. மிகத் திறந்த வெளியில் நின்று ஆடிக் காற்றை அவதானித்துப் பாருங்கள். அது பூமியின் பாடலாகவே கேட்கும்.

ஆடி மாதம் என்பது சூரியன் கடகராசிக்குள் புகுந்து வெளியேறும் கால அளவு என்கிறது தமிழ் கணிதம். 31 நாள், 28 நாடி, ஒரு விநாடி என்று இந்த காலத்தைக் கணக்குப் படுத்துகிறது தமிழ்நாட்காட்டி.

சூரியன் தை மாதத்தில் இருந்து வடகிழக்கு திசை நோக்கி நகர ஆரம்பிக்கும். அது உத்தராயணம் எனப்படுகிறது. தை முதல் ஆனி வரை வடகிழக்கு திசை நோக்கிய நகர்தலில் இருக்கும் சூரியன், ஆடி மாதம் முதல் தென் கிழக்கு திசை நோக்கி நகர ஆரம்பிக்கும்,

ஆக… வானியல், புவியியல் எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் தமிழகத்தில் பக்தி மார்க்கத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆடிமாதம் என்றாலே அது பெண்களுக்குரிய மாதமாகவே பார்க்கப்படுகிறது.

மதுரையில் தன் கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து கண்ணகி மதுரையை எரித்தது ஓர் ஆடி வெள்ளிக் கிழமைதான். ஆடி மாதம் கிராமங்களில் திருவிழா மாதம். பெண்களுக்கு மட்டுமல்ல…பெண் தெய்வங்களுக்கும் திருவிழா மாதம்தான். அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதும், கஞ்சி காய்ச்சி ஊற்றுவதும் ஆடி மாதத்தில்தான் அமோகமாக நடக்கும்.

இந்த ஆடிக்கு இதையெல்லாம் தாண்டிய ஓர் ஆன்மீக குறியீடு இருக்கிறது. அது…. ஆண்டாள் அவதரித்த மாதம். வைணவத்தின் குல விளக்கு…. வளத் தமிழின் சுடர் விளக்கு… பெண்ணிலக்கியத்தின் முதல் கிழக்கு…. என்று ஆண்டாளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதோ ஆண்டாளின் வாழித் திருநாமத்தை வாசிப்போம்.!

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

இந்த வாழித் திருநாமத்தில் ஆண்டாளின் அவதாரத்தில் இருந்து அவரது மகோன்னதம் முதல் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன.

ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் இந்த உலகில் உதித்தவள்…

திருப்பாவை என்ற முப்பது பாசுரங்கள் செப்பியவள்… பெரியாழ்வார் துளசி நந்தவனத்தில் பெற்று எடுத்த பெண் பிள்ளையானவள்…

பெரும்புதூர் மாமுனி என்றால் திருபெரும்புதூரிலே அவதரித்த ராமானுஜர். ராமானுஜருக்கு காலத்தால் முற்பட்டவர் ஆயினும், ஆண்டாள் ராமானுஜரை அண்ணன் என்று அழைத்து மகிழ்ந்ததால் பெரும்புதூர் மாமுனிக்கு பின் ஆனாள்….

ஒரு நூற்று நாற்பத்து மூன்று என்றால் ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களைக் கொண்டது.

மருவாரும்…வளநாடி திருமல்லி வளநாடு….குற்றங்களை நீக்கும் மல்லிநாட்டில் பிறந்தவளே…

உயர் அரங்கற்கே தன்னை உகந்து அளித்தவள் ஆண்டாள்….

திருவில்லிபுத்தூருக்கு வன்புதுவை என்றொரு பெயரும் உண்டு. வன்புதுவை நகரில் அவதரித்த கோதையின் மலர்ப் பாதங்கள் வாழியே என்பதுதான் இந்த வாழித் திருநாமத்தின் பொருள்.

ஆண்டாள் பற்றி வைணவ தத்துவ ஆசான் வேதாந்த தேசிகன் சொல்கிறார்.

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

இதைப் படித்தாலே எளிதில் பொருள் விளங்கிவிடும் அளவுக்கு எளிமைத் தமிழில்தான் செதுக்கியிருக்கிறார் தேசிகன்.

ராமானுஜருக்குப் பின்னான வைணவத்தின் முக்கியமான ஆசாரியரான மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பற்றி என்ன சொல்கிறார்? தனது உபதேச ரத்தின மாலையில்

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்

இன்று திருவாடிப்பூரம்…இதே நாளில் அன்று எங்களுக்காக அவதாரித்தாள் குன்றாத வாழ்வு உண்டாகும்படியாக வைகுந்த அனுபவத்தை அளித்து, பெரியாழ்வாரின் திருமகளாக அவதாரித்தாள் ஆண்டாள்

என்கிறார் மணவாள மாமுனிகள்.

ஆண்டாள் வைணவத்துக்கு மட்டுமல்ல… வளத் தமிழுக்கு மட்டுமல்ல… பெண்ணினத்தின் போற்றுதலுக்குரிய குறியீடு

​ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும். அவர் மேடையேறி திருப்பாவை வாசித்தால் அரங்கனும் ஆண்டாளும் யார் முதலில் கேட்பது என்று போட்டி போடும் அளவுக்கு இருக்கும்.

அப்பேற்பட்ட வைணவ வாதியும், தமிழ் வாதியுமான ஜெகத்ரட்சகனுடைய வழியிலே இனி திருவில்லிபுத்தூர் தந்த வைணவ மாமணி ஆண்டாள் பற்றி பார்ப்போம்.

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon