மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

வேலையில்லா பட்டதாரி 2!

 வேலையில்லா பட்டதாரி 2!

தாயாக மாறிய தந்தை! - 5

சமுத்திரக்கனியின் கேரக்டர் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்துக்கு மிக முக்கியமானது. அம்மா கேரக்டரில் சரண்யா பொன்வண்ணன் அசத்துவதுபோலவே, அப்பா கேரக்டரில் அசரவிட்டவர் சமுத்திரக்கனி. ‘எல்லா அப்பாவும் இப்படித்தான் சார்’ என கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் சொல்வதைக் கேட்டிருக்கக்கூடும். அவர்களெல்லாம் சொல்லத் தவறவிட்ட அல்லது அப்போதைய சமுத்திரக்கனி கேரக்டரின் தாக்கம் அவர்களை அப்போது அப்படிப் பேசவைத்திருக்கலாம். அதற்காக நாமும் பேசாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் அப்பா கேரக்டரை முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு பேச்சுக்கு முதன்மை என்று சொல்லிவிடவில்லை, வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பார்த்தாலே அதை நாம் தெரிந்துகொள்ளமுடியும். ஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமா இருந்தாங்கன்னா, அவங்கள்லாம் அவனைப்பாத்து பயப்புடுறாங்கன்னு அர்த்தம் என்று டீசர் தொடங்குவதிலிருந்து, எதிரியே இல்லாத வாழ்க்கையே போருடா. இந்த எதிரிங்கள்லாம், அவங்களா வருவாங்க. அவங்களாவே போயிருவாங்க என்று சொல்வது வரை சமுத்திரக்கனிக்கு கொடுக்கப்பட்டிருப்பது வசனம் மட்டுமில்லை. வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் கதை.

இரண்டாவது வசனம் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் கதையைத்தான் சொல்கிறது. ரகுவரன் என்ற கேரக்டரை மேலே உயர்த்திச்செல்ல ஒரு முக்கியமான எதிரி வேண்டும். அந்த எதிரி ரகுவரனைவிட அதிகமாக சக்திகொண்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த சக்தியை அழிக்க ரகுவரன் வேகமாக வேலை செய்வான். இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு சுவாரஸ்யமும் கிடைக்கும். இதை மனதில் கொண்டுதான், சாதாரண எதிரியைக் கொடுத்தால் திரைக்கதையில் தொய்வு ஏற்படும் என்று கஜோல் அவர்களை 22 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவுக்குள் கொண்டுவந்திருக்கிறது வேலையில்லா பட்டதாரி 2 டீம்.

சரி இவ்வளவுதானா? இல்லை ரகுவரனுடன் நன்றாகப் பேசத் தொடங்கிவிட்ட சமுத்திரக்கனி ரகுவரனுக்கு ஐடியா கொடுப்பாரா? என்றெல்லாம் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகள் நியாயமானவை. ஆனால், அவர்களது கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்று சொல்லவேண்டியது அவசியமாகிறது. வெளியில் நடைபெறும் பிரச்னைகளை ரகுவரன் வெளியே இருக்கும் நண்பர்களை வைத்துப் பார்த்துக்கொள்வார். ஆனால், வீட்டில் நடைபெறும் பிரச்னைகளை சமாளிக்கத்தான் ரகுவரனுக்கு யாரும் இல்லை. அம்மாவையும் இழந்துவிட்ட ரகுவரன் மனைவியிடம் திட்டும், அடியும் வாங்கும்போதெல்லாம் சமுத்திரக்கனி என்ற கேரக்டர் உள்ளே நுழைந்து காப்பாற்றுவது, ரகுவரனின் அம்மா இல்லாத இடத்தை நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்.

வண்டியை மாற்றச்சொல்லி ரகுவரனின் மனைவி திட்டும்போது சிரித்துக்கொண்டிருக்கும்போது அப்பாவாகவும், மது அருந்திவிட்டு வந்து அடிவாங்கும்போது அம்மாவாகவும் சமுத்திரக்கனி மாறிவிடுவதை டிரெய்லரில் சரியாகக் காட்டி உணர்த்தியிருப்பார்கள். ரகுவரனின் அப்பாவுக்கு சிரிக்கத்தெரியும் என்பதே, வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது.

நான்கு வருடங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கவைத்தது. வாங்கிக்கொடுத்த புத்தகங்களின் மதிப்பு, சாப்பாடு, சுவையான உணவு என எதிலும் குறைவைக்காத தாய் தந்தைகளுக்கு, மகன் படித்து சரியான வேலையில் சேராதபோது அப்படித்தான் இருக்கும். அந்த உணர்வைத்தான் ரகுவரனின் தந்தை வெளிப்படுத்தியிருப்பார். இப்போது அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதுபற்றி அறிய, ஜூலை 28ஆம் தேதி வேலையில்லா பட்டதாரி 2 ரிலீஸாகும்வரை காத்திருக்கவேண்டும். நாளை 7 மணி அப்டேட்டில் விவேக்...

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon