மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

டிஜிட்டல் திண்ணை:’உங்களுக்கு விசுவாசமா இருப்போம்:’டிஐஜி ரூபா மாற்றத்தின் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை:’உங்களுக்கு விசுவாசமா இருப்போம்:’டிஐஜி ரூபா மாற்றத்தின் பின்னணி!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப்பில் இருந்து முதல் மெசேஜ் வந்து விழுந்தது. "சசிகலா மீது புகார் சொன்ன சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகர போக்குவரத்து ஆணையராக அவர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல, 2 கோடி ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் கொடுத்தார் என ஏடிஜிபி சத்யநாராயணா மீது பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார் ரூபா. அந்த சத்யநாராயணாவும் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரூபா சொன்ன புகாரை விசாரிக்கக் கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரூபாவும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

நேற்று டிஜிட்டல் திண்ணையில், "ரூபாவிடமும் சிலர் பேரம் பேசி இருக்கிறார்கள். 'இதையும் நான் மீடியாவுக்கு சொல்லனுமா?' என அவர் திருப்பிக் கேட்க... அமைதியாக வந்த வழி திரும்பி விட்டார்களாம் டீல் பேச வந்தவர்கள். பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துதான் இந்தப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், ரூபாவோ எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை’ என நான் குறிப்பிட்டு இருந்தேன். ரூபாவிடம் நடத்தப்பட்ட பேரம் ஒத்து வராத காரணத்தால் பேரம் பேசியவர்கள் ஓய்ந்துவிடவில்லை.

’ரூபா கொடுத்த அறிக்கையால் மேடத்துக்கு எந்தச் சிக்கலும் வந்துடக் கூடாது. அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..’ என்று அந்த டீம் டெல்லியில் உள்ள ஒரு பிஜேபி பிரமுகர் ஒருவருடன் பேசியிருக்கிறார்கள். அந்த பிஜேபி பிரமுகர் கர்நாடகாவில் உள்ள சிலருடன் பேசி இருக்கிறார். அவர்கள் மூலமாக தற்போது கர்நாடகாவில் அதிகாரத்தில் இருக்கும் ஒரு வி.ஐ.பியை சந்தித்து இருக்கிறார்கள். ‘ரூபா மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நாங்க கேட்கலை. ஆனால், அவங்க பேசியதால எங்க மேடத்துக்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது. அவங்க எப்படி இருந்தவங்கன்னு உங்களுக்குத் தெரியும். ரூபா தொடர்ந்து அதே இடத்தில் இருந்தால், மீண்டும், மீண்டும் எதாவது சொல்லிட்டுதான் இருப்பாங்க. விசாரணை ஒரு பக்கம் நடக்கட்டும். முதல்ல அவங்களை அங்கே இருந்து டிரான்ஸ்பர் பண்ணிடுங்க போதும். இதுக்கு முதல்ல எதிர்ப்பு கிளம்பும். அதைச் சமாளிக்கிறது பெரிய விஷயம் இல்லை. மறுபடியும் எதாவது ஆதாரம்... பேட்டின்னு ரூபா மீடியாகிட்ட போனால் அது மேடத்துக்குத்தான் சிக்கலாகும்’ என்று சொல்லி பேசி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், ‘இதை நீங்க செஞ்சு கொடுங்க.. உங்களுக்கு நாங்க விசுவாசமா இருப்போம்’ எனவும் வெய்ட்டான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் இன்று உடனடியாக ரூபா அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘அரசு அதிகாரி தன்னிச்சையாக பேட்டி கொடுக்க கூடாது. இது துறை ரீதியான நடவடிக்கை என சொல்லுங்க..’ என்று மட்டும் அவரது டிரான்ஸ்பருக்கு காரணம் சொல்லப்பட்டதாம்! “ என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.தொடர்ந்து அடுத்த மெசேஜ் வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது.

”கர்நாடக அரசு அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு விசாரணையில் இது சம்பந்தமான ஆதாரங்களைக் கொடுத்தாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது என ரூபா நினைக்கிறார். தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை மீடியா நண்பர்கள் மூலமாக வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்பது ரூபாவின் திட்டம் என அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ, ‘உங்களுக்குக் குடும்பம், குழந்தைங்கன்னு இருக்காங்க... தேவையில்லாமல் அவங்களோடு எதுக்கு மோதணும். இந்த பிரச்னையை இத்தோடு விட்டுடுங்க..’ என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் ரூபாவோ, ‘இதுக்கெல்லாம் பயந்து இருந்தால் நான் காக்கி சட்டையைப் போட்டு இருக்கவே மாட்டேன். நான் எந்தத் தப்பும் செய்யவே இல்லை. நான் எதுக்கு பயப்படணும்? அவங்க என்னை மாற்றியதால் நான் மாறிட மாட்டேன்..’ என்று சொல்லி வருகிறாராம்!” என்று முடிந்தது அடுத்த மெசேஜ். அதையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

திங்கள், 17 ஜூலை 2017

அடுத்ததுchevronRight icon