மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

'ஜெ' இருக்கும்போது கமல் ஏன் பேசவில்லை!

'ஜெ' இருக்கும்போது கமல் ஏன் பேசவில்லை!

திரைப்பட நடிகர் கமல்ஹாசனுக்கு, தமிழகத்தில் இதுவரை ஊழல் நடைபெற்ற போதெல்லாம் தெரியவில்லையா ? ஏன் அப்போது அவர் வெளிநாடுகளுக்கோ அல்லது வேற கிரகத்திற்கோ சென்று விட்டாரா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது எனக் கூறியிருந்தார். அதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு, ஆளும் கட்சி தரப்பில் இருந்து தமிழக அமைச்சர்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கமலுக்கு ஆதரவாகத் தமிழக ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்த கமல்ஹாசன் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக்கும் உரிமை உண்டு என்று நேற்று ஜூலை 16ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதையடுத்து, தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனது புதிய படம் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியல் குறித்து இதுபோல் ஏதாவது பரபரப்பு அறிக்கை வெளியிட்டு சத்தமில்லாமல் ஒதுங்கி விடுவார். அதையடுத்து, ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து, ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வர்லர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டி.வி.ஊடகங்கள் போன்றவை மாறி,மாறித் தொடர்ந்து செய்திகளை வெளியிடும்போது அவரது புதிய படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து வசூலை அள்ளி விடுவது வழக்கம்.

தற்போது அதே பாணியை கடைப்பிடிக்கும் விதமாக, தனியார் டி.வி-யில் பிக் - பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் இந்த யுத்தியைக் கையாண்டுள்ளதுபோல் தெரியவருகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கருத்து குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசுகையில்: அதிமுக அரசைக் குறை கூறும் நடிகர் கமல்ஹாசன், இதற்கு முன்பு ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழக அரசைக் குறை கூறும் தைரியம் இருந்ததா? கடந்த ஆண்டு துணிச்சலாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இப்போது மட்டும் ஏன் குறை கூறுகிறார்.

அவர், திரைப்படத்துறையில் நலிந்தவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். திரைத்துறையில் உள்ள குறைகளை சரி செய்யும் பணியைக் கமல் செய்தாலே போதும். அரசியலை அவர் பின்பு பார்க்கலாம் என்று கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் அறிக்கை குறித்து பதில் கூறுகையில், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்ற விவகாரத்தில் தலையிடுகிறார் என்றும் கூறியுள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon