மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

நிதி விவரங்களை வெளியிடாத ரிசர்வ் வங்கி!

நிதி விவரங்களை வெளியிடாத ரிசர்வ் வங்கி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையை இன்னமும் எண்ணிக் கொண்டிருப்பதாகக் கூறும் ரிசர்வ் வங்கி, ஜூன் 30ஆம் தேதி நிறைவு பெறும் வாரத்துக்கான ‘பேலன்ஸ் ஷீட்’ எனப்படும் விவரங்களை வெளியிடாமல் உள்ளது. இவ்வாறு நிதி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடாமல் இருப்பது இதுவே முதன்முறையாகும்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்பு நோட்டுகளைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகளில் திருப்பிச் செலுத்துவதற்கு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் முடிந்து ஏழு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டது, கருப்புப் பணம் எவ்வளவு சிக்கியது போன்ற விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடாமல் உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சமீபத்தில், நோட்டுகள் எண்ணும் பணி தொடருவதாகவும், அவற்றை எண்ணுவதற்கு புதிய எந்திரங்கள் கொண்டுவரப்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதி விவரங்களை வெளியிடுவதில் அவ்வங்கிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், எவ்வளவு மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது என்பது நிதி விவரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே ஜூன் 30ஆம் தேதி விவரங்களை வெளியிடமுடியாமல் போயுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் கணக்கு விவரங்கள் இறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon