மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

டிஐஜி ரூபா மாற்றம் : முதல்வர் விளக்கம்!

டிஐஜி ரூபா மாற்றம் : முதல்வர் விளக்கம்!

சசிகலாவுக்கு எதிராகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா அதிரடியாகப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இந்தநிலையில், சிறைக்காவலர்கள் சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை வழங்கியுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுகுறித்து இன்று ஜூலை 13 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ரூபா,’சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதுகுறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இந்த சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஜூலை 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “இதுகுறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சிறையில் முறைகேடு நடப்பதாக டி.ஐ.ஜி. குற்றம் சாட்டியுள்ளார். சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதுபோலவே அரசின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு முன்பாகவே ரூபா ஊடகங்களில் பேசியது தவறானது.

மேலும், அவர் அடிக்கடி ஊடகத்தினரைச் சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ரூபா பேட்டி கொடுத்தது விதிமுறை மீறிய செயலாகும். எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அதேபோல், உள்துறை மூத்த அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இந்த விசாரணை நடந்துக்கொண்டிக்கும் நிலையில், பார்வையாளர்களை பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் டிஐஜி ரூபா.

இப்படி அடுக்கடுக்கான புகார்கள் கூறி வந்த நிலையில் சிறைத்துறை டிஐஜி ரூபா ஜூலை 17 ஆம் தேதி இன்று அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 2 கோடி ரூபாய் பெற்று சசிகலாவுக்கு சலுகை தந்ததாக கூறப்பட்ட ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி கர்நாடக சிறைத்தறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பெங்களூர் சிறைத்துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இது ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கை. ஊடகத்திற்கு எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon