மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கமலுக்கு பன்னீர் ஆதரவு!

கமலுக்கு பன்னீர் ஆதரவு!

தமிழக அரசு ஊழல் நிறைந்துள்ளது என்று குற்றம் சாட்டிய கமலஹாசனை அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கமலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எழுந்த சர்ச்சையால் ஜூலை 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமலஹாசன், “தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார். மேலும், சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி இப்போது சொல்கிறார். நான் ஒரு வருடம் முன்பே அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்’’ என்று அவர் தெரிவித்தார். இது தமிழக அமைச்சர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, கமலஹாசன் தனது ‘பிக் பாஸ்’ டி.ஆர்.பி. ரேட் ஏற வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின்மீது சேற்றை வாரி இறைக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது பேசாத கமல் தற்போது பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜூலை 16-ஆம் தேதி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கமலஹாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “ஜனநாயகத்தில் ஒரு ஆட்சியைப் பற்றி கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது சரியல்ல. அந்த உரிமையை அதிகாரத்தில் இருப்பவர்கள் தட்டிப் பறிக்க முடியாது. மாறுபட்ட கருத்து இருந்தால் அதற்குரிய பதிலை சம்மந்தப்பட்டவர்கள் தெரிவிப்பதுதான் சிறந்த ஜனநாயக நடைமுறை ஆகும். ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழி நடத்துவதில் மெத்தனப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon