மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

வருமான வரித்துறை ஆணையர்கள் மாற்றம்!

வருமான வரித்துறை ஆணையர்கள்  மாற்றம்!

நாடு முழுவதும் சரியாக செயல்படாத 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை ஆணையர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வருமான வரித்துறையை மேம்படுத்துவதற்காக மண்டல வாரியாக களை எடுக்கும் பணிகளை நேரடி வரிவிதிப்பு வாரியம் தொடங்கி உள்ளது. இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள வருமான வரித்துறை தலைவர்களின் விபரங்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவை ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சமீபத்தில் இரண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் 80 பேரும் தற்போது 245 பேரும் என 325 வருமான வரி ஆணையர்கள் நாடு முழுவதும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ம் தேதி இதுபோல் 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆணையர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மூன்று நடவடிக்கைகளும் குறைந்த இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதிலும், 245 ஆணையர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு பெரியது. பணிகள் சிறப்பாக நடைபெறவும், அதில் வெளிப்படைத் தன்மை இருப்பதற்குமே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதனிடையே வரி செலுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இடம் மாறுதல் செய்யப்பட்டவர்கள் உடனடியாக புது இடத்தில் பொறுப்பேற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon