மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

வேர்களை வெளிச்சப்படுத்திய கலைஞன்!

வேர்களை வெளிச்சப்படுத்திய கலைஞன்!

`என் இனிய தமிழ் மக்களே!' என்ற ஒரே ஒரு வசனம் போதும் இயக்குநர் பாரதிராஜா நம் எல்லார் கண்முன்னும் வந்துவிடுவார். கிராமத்து சினிமாவின் அசல் முகத்தை தன் படங்களின் மூலம் வெளிவுலகிற்கு கொண்டு வந்தவர். தன் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டுமென விரும்பும் புதுமை விரும்பியான இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இன்று (ஜூலை17) அவரது 76 வது பிறந்த தினம்.

கிராமத்து முகங்களை அதுவரை யாரும் திரைக்கு கொண்டு வராத சமயத்தில் தனது முதல் படைப்பான `16 வயதினிலே' படத்தின் மூலம் அசல் மனிதர்களாய் தன் படத்தின் நாயகர்களை காட்டினார். கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூவரும் சப்பாணி, பரட்டை, மயில் என கிராமத்து பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தனர். இந்த படத்தில் தான் ரஜினிக்கு நெகட்டிவ் ரோல் கொடுத்து `இது எப்படி இருக்கு' என்ற பஞ்ச் வசனத்தை படமுழுக்க பேச வைத்தார். இப்படத்தில் கிளைமக்ஸ் காட்சியில் ஸ்ரீதேவியை ரஜினி பாலியல் வன்புணர்வு செய்வதாகத்தான் ஸ்கிரிப்ட் அமைத்திருந்தார். அவரின் உதவி இயக்குநரான பாக்யராஜ் ஸ்ரீதேவியின் இமேஜ் பாதிக்கப்படுமென சொன்னதால், உடனே கிளைமக்ஸ் காட்சியை மாற்றியமைத்தார். பொதுவாக பாரதிராஜா எழுதி வைத்த ஸ்கிரிப்ட்டை விட, ஸ்பாட்டில் என்ன தோணுகிறதோ அதையே படமாக்குவார். இன்றளவும் இப்படம்தான் விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படமாக இருக்கிறது.

பாரதிராஜா என்றால் கிராமத்து படம்தான் எடுப்பார் என்ற எண்ணத்தை உடைத்த படம் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த `சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படமாகும். முழுக்க முழுக்க நகரத்தை மையமாக வைத்து எடுத்த திரைப்படம். `16 வயதினிலே' படத்தில் கமலை கோவணத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா இப்படத்தில் கோட்சூட்டுடன் ஸ்டைலீஷ் ஹீரோவாக காட்டினார். க்ரைம் த்ரில்லர் படமான இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெற்றது.

பாரதிராஜா பெரும்பாலான படங்களுக்கு ஆர்.செல்வராஜ், கலைமணி, மணிவண்ணன் உள்ளிட்ட மற்றவர்களின் கதைகளையே தன் படத்திற்கு பயன்படுத்தி கொண்டார். அப்படி கம்யூனிச சிந்தனை கொண்ட இயக்குநர் மணிவண்ணன் கதை, வசனத்தில் வெளிவந்த திரைப்படம் `அலைகள் ஓய்வதில்லை'. இப்படத்தில் அப்படியென்ன புதுமை என்றால் இந்துமத்தை சார்ந்த ஒருவனுக்கும் கிறித்தவ மதத்தை சார்ந்த ஒருத்திக்கும் இடையே மலர்கிற காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பாரதிராஜாவின் திரைக்கதை நேர்த்தியால் இப்படம் அன்றைய இளசுகளின் நெஞ்சில் இடம்பிடித்தது. கார்த்திக், ராதா இப்படத்தின் மூலமே அறிமுகமானதோடு அவர்களின் மேம்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாய் வலம் வர இப்படமே அடித்தளமிட்டது.

`விழியில்லை எனும்போது ஒளி கொடுத்தாய்.. விழி வந்த பின்னால் ஏன் சிறகொடுத்தாய்' என்ற ஒற்றை வரிதான் `காதல் ஓவியம்' படத்தின் சாராம்சம். பார்வையற்ற ஒருவனின் வாழ்வில் நின்றுபோன காதலி, பார்வை திரும்ப வந்த போது வேறொருவனின் மனைவியாக இருக்கிறாள். காதலை வெளிப்படுத்த முடியாமல் ராதா திணறுவதும், அவளின் கொலுசொலி கேட்க நாயகன் போராடுவதுமான இறுதி போராட்டத்தின் காட்சியை தத்ரூபமாய் காட்சிப் படுத்தியிருப்பார். இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி. ஆகிய மூவரும் சேர்ந்து இசையாலும் பாடலாலும் குரலாலும் மேலும் இப்படத்திற்கு வலு சேர்த்தனர்.

ஒரு முதியவனுக்கும் இளம்பெண்ணுக்குமான காதலை மையமாக கொண்டு `முதல் மரியாதை' படத்தை இயக்கினார். எந்நேரமும் வசவு பாடிகொண்டிருக்கும் மனைவியிடம் அன்பை பெறமுடியாமல் புதிதாய் தன் ஊருக்கு வாழ வந்த ஒருத்தியிடம் அன்பைபெற நினைக்கும் சிவாஜியின் கேரக்டர்தான் இப்படத்திற்கு உயிர்நாடியாய் இருக்கிறது. இப்படியான உறவை மண்ணின் சாரத்தோடு பதிவு பண்ணிய விதம் புதுமையாக இருந்தது. இப்படத்தில் தான் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா ஆகிய மூவர் கூட்டணி பிரிவை சந்தித்தது. வைரமுத்துவின் வரிகளுக்கு தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது.

புரட்சிகரமான படங்களில் நடித்து வந்த சத்யராஜ்ஜை `கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் காதலால் கன்னுக்குட்டி போல அலைந்து திரிய வைத்தார் பாரதிராஜா. டீச்சர் மீது காதல் வயப்படும் ஒரு இளைஞனின் மனநிலையை அப்படியே சத்யராஜிடம் பிரதிபலிக்க வைத்திருப்பார். இப்படத்தின் பாடல்களும் படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா ஆகிய மூவர் கூட்டணியில் கடைசியாக ஒலித்த பாடல்களும் இதில்தான் இடம்பெற்றன.

பிராமண ஆச்சாரங்களுக்கும் சாதிய முறைகளுக்கும் எதிராக எடுக்கப்பட்ட படம்தான் `வேதம் புதிது'. `பாலுங்கிறது உங்க பேரு தேவர்ங்கிறது எங்க வாங்குன பட்டம்' என்ற சிறுவனின் ஒரே கேள்வியின் மூலம் அதிரவைத்தார். பிராமண பெண்ணின் மீது கொண்ட மகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யராஜ்ஜின் மகன் இறந்துபோக, அந்த பிராமணக் குடும்பத்தை ஊரார் அழித்துவிட சாதியால் உண்டான கரையை அகற்ற தப்பி வந்த நாயகியின் தம்பியை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவனின் கேள்வி ஞானத்திலே சத்யராஜ் திருந்தி விடுவதாக அமைத்துள்ளர் பாரதிராஜா. படம் வெளிவந்த வேளையில் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றது.

தென்கிழக்கு பகுதியைச் சார்ந்த மக்களின் மனதை வெளிச்சம் போட்டு காட்டிய படம் `கிழக்குச் சீமையிலே'. பங்காளி பிரச்சனைகளையும் மாமன் மச்சினன் உறவு பகையையும் விவரித்து சொல்லிய படம். பகை முற்றி எப்படி தங்களுக்குள்ளே ஒரு சமூகம் அடித்துக் கொண்டு அழிந்து கொள்கிறார்கள் என்பதை பதிவு செய்தார் பாரதிராஜா. இப்படத்தில் தான் இளையராஜாவிற்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்து வெற்றியும் கண்டார்.

முன்பொரு காலங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றும் பழக்கம் மறைமுகமாக பல இடங்களில் நடந்து வந்தது. அப்பிரச்சனையை மையமாக வைத்து தனது `கருத்தம்மா' படத்தின் மூலம் அழுத்தமாக பேசினார் பாரதிராஜா. தன் அம்மாவின் பெயரில் எடுத்த இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்ட அருமையான நிகழ்வும் நடந்ததுண்டு.

இதன் பின்னர் பல படங்கள் இயக்கினாலும் பெரிதும் ரசிகர்களின் மனதை கவரவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `அன்னக்கொடி' படமும் ஏமாற்றம் அளித்தது. `குற்றப்பரம்பரை' தலைப்புக்காக இவருக்கும் இயக்குநர் பாலாவுக்கும் பிரச்சனையாகி, ஒருவழியாக முடிவுக்கு வந்து தற்போது அப்படம் குறித்தான வேலைகளிலும் முக்கிய கதாப்பாத்திரங்கள் அமையும் படங்களிலும் நடித்து வருகிறார். கிராமத்து மண்வாசனை கலந்த படத்தைக் கொடுப்பதோடு சாதிய சமூகம் சார்ந்த வன்முறைகளையும், உறவுமுறைகளுக்கிடையே ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் அவற்றை கிளைகளிலிருந்து பாராமல் மறைந்து கிடக்கும் வேர்களை வெளிச்சமிட்டு காட்டினார் பாரதிராஜா என்றால் அது மிகையாகாது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon