மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சீன பொருளாதாரம் 6.9 % வளர்ச்சி!

சீன பொருளாதாரம் 6.9 % வளர்ச்சி!

சீன நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 6.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சீன தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சீனா முன்கூட்டியே கணித்திருந்த 6.5 சதவிகித வளர்ச்சியைவிட அதிகமாகும்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் சில்லறை விற்பனை துறை அதிகபட்சமாக 10.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது; சேவைகள் துறை 7.7 சதவிகிதம் வளர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சில்லறை விற்பனை 2016ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தைவிட 11 சதவிகிதமும், 2017ஆம் ஆண்டின் மே மாதத்தைவிட 0.93 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சொத்துகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது முந்தைய ஆண்டைவிட 8.6 சதவிகிதம் அதிகமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டைவிட 0.6 புள்ளிகள் குறைவாகவும் உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஜனவரி - ஜூன் காலகட்டத்தில் 0.6 புள்ளிகள் குறைந்துள்ளது.

முன்னதாக, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும், இந்த முன்னிலை வருகிற ஆண்டுகளிலும் நீடிக்கும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதாவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது வருகிற 2025ஆம் ஆண்டு வரையில் சராசரியாக 7.7 சதவிகிதமாக இருக்கும். இதன் மூலம் வருகிற ஆண்டுகளிலும் உலகின் மிக வேகமான வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னிலை வகுக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை பொருளாதார வளர்ச்சியில் துருவமாக இருந்த சீனா தனது இடத்தை இந்தியாவிடம் இழந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon