மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தவிக்கும் என்.எல்.சி. தொழிலாளிகள்!

தவிக்கும் என்.எல்.சி. தொழிலாளிகள்!

என்.எல்.சி. நிறுவனத்துக்கு, நிலம், வீடு, இடம் கொடுத்தவர்களுக்கு, முதலில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டதன் பிறகு, அவர்கள் நிரந்தர தொழிலாளியாக நியமிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில், சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளிகள் நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

என்.எல்.சி.-யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு மாதம் 26 ஷிப்ட் வேலைக் கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ 400 முதல் ரு 500 வரையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு பணி நாட்களை 26 ஷிப்ட்டிலிருந்து 19 ஷிப்டாக குறைத்துள்ளார்கள். மாதமொன்றுக்கு, ஷிப்ட் நேரத்தைக் குறைத்தால் ஒப்பந்த தொழிலாளிகளை சட்ட ரீதியாக நிரந்தரம் செய்ய முடியாது, அதன் காரணமாக, ஒப்பந்த தொழிலாளிகள் சுமார் 400 பேர் இன்று ஜூலை 17ஆம் தேதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

அதையடுத்து, போராட்டம் நடத்திய 400 தொழிலாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் சி.பி.ஐ, தோழர் சேகர் இதுகுறித்து கூறுகையில், என்.எல்.சி. நிறுவனத்துக்கு இடம், நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் முழுமையாக வேலைக் கொடுக்கவில்லை, தற்போது வடமாநிலத்திலிருந்து வந்துள்ள உயரதிகாரிகள் வட மாநிலத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் இளைஞர்களைக் குறைந்த சம்பளத்துக்கு அழைத்து வந்து வேலை வாங்கி வருகிறார்கள். அதனால் படிப்படியாக மண்ணின் மைந்தர்களை ஆட்குறைப்பு செய்து வருகிறார்கள். எனவே, ஒப்பந்த தொழிலாளிகளுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தை கட்டமைக்கப் போகிறோம் என்று கூறினார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon