மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சிவாஜி சிலை அகற்றப்படுமா?

சிவாஜி சிலை அகற்றப்படுமா?

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனை கவுரவிக்கும் வகையில் அப்போதைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அவருக்கு, சிவாஜியின் 8அடி முழுஉருவ வெண்கலை சிலையை கடற்கரை சாலையான காமராஜர் சாலை– ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், காந்தி சிலைக்கு எதிரே நிறுவியது.

அந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும் என்று காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் கூறியது. அதற்கு, தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சீனிவாசனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நாகராஜன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடற்கரை சலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அப்போது இதுகுறித்து அந்தப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது: ''இந்த வழக்கு ஜூலை 17-ம் தேதி அன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. நடிகர் திலகத்தின் ஆசியுடனும் ரசிகர்களின் நம்பிக்கையுடனும், நம்முடைய கோரிக்கை நிறைவேறும் என்று நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணி மண்டபத்தில் வைக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மெரினா சாலையில் இருந்து அகற்றப்படும் சிலையை காமராஜர் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கைவிடுத்தார்.அதற்கு எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சிவாஜியின் நினைவு தினமான ஜூலை 21 ஆம் தேதி அவரது சிலையை அகற்றக் கூடாது என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon