மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

டி.வி.எஸ் : ரூ.500 கோடி முதலீடு!

 டி.வி.எஸ் : ரூ.500 கோடி முதலீடு!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டில் புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவிருக்கிறது. இதற்காக சுமார் ரூ.500 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்கிறது.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அதிக வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக, பஜாஜை பின்னுக்குத் தள்ளி கடந்த ஆண்டில் டி.வி.எஸ். நிறுவனம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் 35 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை 45 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் மேம்பாட்டுப் பணிகளுக்காக குறைந்தது ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடியை முதலீடு செய்கிறது. ஆனால் இந்த ஆண்டில் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, டி.வி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் எனவும், புதிதாகத் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனத்தின் விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 24.8 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து 13 சதவிகித வளர்ச்சியை டி.வி.எஸ். நிறுவனம் பதிவு செய்தது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தைத் தொடர்ந்து ஸ்கூட்டர் விற்பனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள டிவி.எஸ்., 7 சதவிகித உயர்வுடன் 8.26 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon