மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

டெல்லியில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம் !

டெல்லியில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம் !

டெல்லியில் மீண்டும் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள் தமிழக விவசாயிகள். இதற்கு முன் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 43 நாட்களாக பல நூதனப் போராட்டம் நடத்தியதை யாரும் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. ஆனாலும் தமிழக விவசாயிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இறுதிவரை சந்திக்கவே இல்லை. இறுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகளைச் சந்தித்து விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து தமிழக விவசாயிகளின் போராட்டம் முடிவிற்கு வந்தது. இதன் பிறகு உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகள் பிரச்சனையை தமிழக அரசு இதுநாள் வரை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று( 16.7.2017) ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்கள். டெல்லிக்குப் புறப்படும் முன் சென்னையில் நேற்று போராட்டக் குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசும் போது, “தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நானூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த துயரச் செய்தி ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. எனினும், இது சம்பந்தமாக பிரமரை நேரில் சந்தித்து முறையிட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சமாதானம் கூறிய தமிழக முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ் வொரு விவசாயிக்கும் தனிநபர் காப்பீடு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தற்போது டெல்லிக்குச் செல்கிறோம்.அங்கு ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் கூடி போராட்டம் நடத்த உள்ளோம்,” என்று அய்யாக்கண்ணு மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து, நேற்று(16.7.2017) நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று(17.7.2017) திங்கட்கிழமை காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். கால், கைகளைச் சங்கிலியால் பிணைத்து பூட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “மத்திய அரசின் சார்பில் இணை அமைச்சர் எங்களிடம் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை . அடுத்த ஓராண்டுக்கு கடன்கள் வசூலிக்கும் நடவடிக்கையில் வங்கிகள் இயங்காது என்பது உள்படப் பல உறுதி மொழிகளை அவர் அளித்தாலும், அப்படி நடக்கவில்லை வங்கிகள் கெடுபிடியாக வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அதே போல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார். அவர் வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. இந்த நிலையில் தான், நாங்கள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். அடுத்த 100 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் நூதன வழியில் போராட்டம் நடைபெறும்” என்றார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon