மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஆளும்கட்சிக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்!

ஆளும்கட்சிக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்!

மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தலைமையில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியில், காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் 2 எம்.எல்.ஏ.-க்கள் விலகி பாஜக-வில் இணைந்தனர்.

மணிப்பூர் மாநில சட்டசபைக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றபோது, அதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை மெஜாரிட்டி கிடைக்கவில்லை.மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் கைப்பற்றின. மீதமுள்ள தொகுதிகளில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சியினர் ஆகியோர் தலா 4 தொகுதிகளையும், லோக்ஜன சக்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 31 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 3 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினரால் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை. அந்தக் கட்சிகள் பாஜக-வுக்கு ஆதரவளித்தன. அதையடுத்து, தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஆளுநர் மாளிகையில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் எளிமையான முறையில் பதவியேற்றார். அதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் அதிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தனர். அதில், ஷியாம் குமார் என்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக மேலும் 2 எம்.எல்.ஏ-க்கள் ஷேத்ரிமயூம் பிரேன் சிங் மற்றும் பாவ்னம் ப்ரோஜன் ஆகியோர் நேற்று ஜூலை 16ஆம் தேதி பாஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதையடுத்து, ஆளும் கட்சியான பாஜக-வின் எம்.எல்.ஏ-க்கள் பலம் 31-ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பலம் 20-ஆக குறைந்தது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று ஏற்பட்ட அரசியல் பரபரப்பு ஓய்வதற்குள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியான சொய்பாம் லெய்கையில் இன்று ஜூலை 17ஆம் தேதி காலை 11.30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் குண்டு வெடிப்பு நடைபெற்றதால், இந்தச் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு ஏதும் தொடர்பு இருக்குமோ என்றும் உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon