மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சொத்துக்காக நால்வர் எரித்து கொலை!

சொத்துக்காக நால்வர் எரித்து கொலை!

பீகார் மாநிலத்தில் சொத்துக்காக சிறுமிகள் உட்பட 4 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் கவுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் அவரது தம்பி கேதர் சிங். இவர்கள் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 16) இரவு கேதர் சிங் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இவரது மகன் லக்ஷ்மண் குமார் சிங் (12), மட்டும் தனியறையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அவர்களது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதையறிந்த லக்ஷ்மண் குமார் சிங் வெளியே ஓடி வந்து, அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அந்த வீட்டிற்குள் இருந்த கேதர் சிங்கின் மனைவி பிரதிமா தேவி (40), அவர்களது இரண்டு மகள்கள் சோனி குமாரி (17), டிம்பிள் குமாரி (15), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேதர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து லக்ஷ்மண் குமார் சிங் போலீசிடம் புகார் அளித்துள்ளார். அதில், என் மாமா பூர்வீக சொத்துக்காக எனது பெற்றோர்களை மிரட்டி வந்தார். அந்த சொத்துக்களை அவர் விற்க முயன்றார். எங்களை அடிக்கடி வார்த்தையில் மிரட்டி வந்த மாமா, நேற்று( ஜூலை 16) இரவு எங்கள் வீட்டில் தீ வைத்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் மனோஜை தேடி வருகின்றனர்.

மனோஜ் ஒரு சூதாட்டக்காரர் மற்றும் லாட்டரியில் பணத்தை முதலீடு செய்வதை விரும்புவார். அதனால், தன்னுடைய பூர்வீக சொத்தில் ஒரு பகுதியை விற்க முயன்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேதர் சிங்கை, குடும்பத்துடன் தீ வைத்து கொலை செய்து விட்டார் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்து தகராறில் கொலை நடக்கும் சம்பவம் கதிகார் மாவட்டத்தில் சிறப்பு பெற்றது. இரண்டு வருடங்களுக்கு முன், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon