மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய முதல் நாள் கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அறிமுகம் செய்வதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் கூடியது. அதன் பிறகு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஜூலை 17ஆம் தேதி மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஆகஸ்டு 11ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் கூடியபோது, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவையைத் தொடங்கி வைத்தார். அப்போது, பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அவை தொடங்கியதும் முன்னாள் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மற்றும் வினோத் கன்னா போன்ற மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் கண்டனம் தெரிவித்தார். அதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவைத் தலைவரான துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி மாநிலங்களவையைத் தொடங்கி வைத்தார். அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவை ஒத்தி வைக்கப்பட்டதும், செய்தியாளர்களிடம் கூறுகையில், மழைக்கால கூட்டத்தொடர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடு முழுவதும் பருவ மழைக்காகவே காத்திருக்கிறார்கள். அதையொட்டி, இந்த மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக அமையும். ஜி.எஸ்.டி.-யின் நோக்கமே பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமையாகும். ஜி.எஸ்.டி. குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும். ஜி.எஸ்.டி.க்கு பின்னர் புதிய துவக்கத்தைப் பார்க்க முடியும் என்று மோடி கூறியுள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon