மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் - முதல்வர் வாக்களிப்பு!

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் - முதல்வர் வாக்களிப்பு!

நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக, இன்று ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் 24ஆம் தேதி முடிவடைகிறது. அதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. பஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல், அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவைத் தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தலும் இன்று நடைபெறுவதால் நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத்தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் வாக்களித்தார். இன்று காலை முதல் அனைத்து மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை குழு கூட்டம் நடைபெறும் அறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன. தமிழக தேர்தல் பார்வையாளராக அனுஷ் பிரகாஷ் என்பவரும், தேர்தல் நடத்தும் அலுவலராகச் சட்டசபை செயலாளர் பூபதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் ஓட்டுப்போட்டு வாக்களிப்பதைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கப்துல்லா ஆகியோர் வாக்களித்தனர். அதன் பிறகு அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகவுள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 176 ஆகவுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.கே.நகர் தொகுதியை தவிர்த்து, 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 135 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக-வை சேர்ந்தவர்கள். இதேபோல், திமுக எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஒருவரும் என மொத்தம் 98 பேர் திமுக கூட்டணியில் உள்ளனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தமிழக எம்.பி.க்களை கணக்கில் கொள்ளும்போது, அதிமுக-வுக்கு 50 எம்.பி.க்கள் உள்ளனர். இதேபோல், திமுக-வுக்கு 4 எம்.பி.க்களும், பாரதீய ஜனதா, பாமக-வுக்கு தலா ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், ஓட்டுப் பெட்டி பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல், அனைத்து மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளும் ஓட்டுப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். நாடாளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டிகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்குள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25ஆம் தேதி பதவி ஏற்பார் என நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon