மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இவரை நிறுத்தியதே வெற்றிதான் : ஸ்டாலின்

இவரை நிறுத்தியதே வெற்றிதான் : ஸ்டாலின்

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள பாஜகவை எதிர்த்து 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்தியதே பெரிய வெற்றிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இன்று ஜூலை 17 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முதல் வாக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், புரட்சித் தலைவி அம்மா அணி பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்களித்தனர்.

தேர்தலில் வாக்களித்த பின் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,' ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர், மத்தியில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு ஆரம்பத்தில், ஒற்றுமையாக போட்டியின்றி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு, தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துவிட்டதால், இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது வேதனைக்குரியதாக உள்ளது. இருந்தாலும் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக-வை எதிர்த்து ஒரு வேட்பாளரை களமிறக்கியிருக்கிறது என்றால் அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடியாக அமைந்துள்ளது. எனவே ஜனநாயக முறைப்படி எங்களின் வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்தோம்.

திமுக தலைவர் கலைஞர் வாக்களிக்க வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின்,' மருத்துவர்கள் கூறிய காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்று வாக்களிக்க வருவதற்கு வாய்ப்பில்லை . அவரை தவிர்த்து எங்கள் கட்சியின் 88 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் நடிகர் கமலுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேசி வருவது குறித்த கேள்விக்கு,'அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அரசை விமர்சனம் செய்யக்கூடிய அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளது. அப்படித்தான் கமலும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அமைச்சர்கள் அவரை அச்சுறுத்தி வருவது ஜனநாயக விரோத செயல். கமலும் பொதுவாக ஊழல் நடைபெறுகிறது என்று மட்டுமே கூறியுள்ளார். ஆனால் நான் அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் கமிஷனர் மீதும் வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்தின் ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறினேன். கமல் மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லும் அமைச்சர்கள் திமுக மீது வழக்குப்பதிவு செய்யத் தயாரா?. அப்படி பதிவு செய்தால் அதை சந்திக்க தயாராக உள்ளோம்' என்று தெரிவித்தார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon