மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

12 வங்கிகள் மட்டுமே இருக்கும்!

12 வங்கிகள் மட்டுமே இருக்கும்!

இந்திய வங்கிகளைச் சர்வதேச தரத்துக்கு உயர்த்தி வரும் நடவடிக்கையில் வங்கிகள் இணைப்பில் ஈடுபட்டு வருவதால், இந்தியாவில் 10 முதல் 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) சமீபத்தில் தனது துணை வங்கிகள் இணைப்பில் ஈடுபட்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனெர் & ஜெய்பூர் ஆகிய ஐந்து வங்கிகளும் எஸ்.பி.ஐயுடன் இணைக்கப்பட்டன. இதன்மூலம் சர்வதேச அளவில் தலைசிறந்த மிகப்பெரிய 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. உருவெடுத்தது. இதேபோன்று நாட்டின் மற்ற பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளுக்குப் போட்டியாகத் தரம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்கிகள் இணைப்புக்குப் பிறகு குறைந்தது நான்கு வங்கிகளாவது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்று மிகப்பெரிய வங்கிகளாக உருவெடுக்கும். பிராந்தியத்தை மையமாகக் கொண்ட பஞ்சாப் & சிந்த் வங்கி, ஆந்திரா வங்கிகள் இணைக்கப்படாமல் தனித்தே இயங்கும். பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவை வங்கிகள் இணைப்பில் ஈடுபடும். இணைப்புக்குப் பிறகு இவ்வங்கிகள் சர்வதேச தரத்தில் மிகுந்த போட்டித்தன்மையுடன் இயங்கும்” என்று கூறியுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon