மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு இன்று (ஜூலை,17) தொடங்கியது.

பிளஸ்- 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியானது.

அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. உயர் கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கிறது.

அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிட்டனர்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 1 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டுப் பொறியியல் இடங்களுக்கு 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். பின்னர், பதிவு செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்தாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டுப் பொறியியல் இடங்களுக்கு 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் கடந்த மாதம் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஜூலை,17) மற்றும் நாளை (ஜூலை,18) தொழில் கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19-ஆம் தேதி நடக்கிறது. விளையாட்டு பிரிவு வீரர்களுக்கான கலந்தாய்வு 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். 17ஆம் தேதி துணை கலந்தாய்வும், 19 ஆம் தேதி ஆதி திராவிடர், அருந்ததியர் ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்குக் கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 583 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அவற்றுள் தொழில் பிரிவு மாணவர்கள் மூலம் 6 ஆயிரத்து 224 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இன்று நடைபெறும் தொழில் பிரிவு கலந்தாய்வில் உள்ள 6,224 இடங்களுக்கு தகுதியான 2 ஆயிரத்து 84 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வு நாளை (ஜூலை,18) மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon