மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழக அரசு பல முறை மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூலை 16) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் சென்ற 4 மீனவர்கள் இன்று (ஜூலை 17) காலை இலங்கை கடல் பரப்புக்கு உட்பட்ட கோவிலன் கடல் பகுதியின் வடகிழக்கே 9 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் நாட்டுப்படகுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது மீன்வளத்துறையிடம் பதிவு செய்து விட்டுச் செல்வார்கள். நீண்ட தூரம் செல்வதால் இந்த ஏற்பாடு. நாட்டுப்படகு மீனவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்வதால் அவர்கள் பதிவு செய்வது கிடையாது. எல்லை தெரியாததன் காரணமாக அவர்கள் இலங்கை எல்லைக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் மசோதா சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர்களை மீட்ககோரி அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon