மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

அமர்நாத்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அமர்நாத்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலங்களில் பனி லிங்கம் உருவாகும். இதனைத் தரிசிக்க இந்தியா மட்டுமல்லாது ஆண்டை நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவர்.

இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதற்கிடையே கடந்த 10ம் தேதி அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். நேற்று (ஜூலை 16) நிகழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். எனினும் பனி லிங்கத்தைப் பார்க்கவரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

கடந்த 18 நாட்களில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 18வது நாளான நேற்று (ஜூலை 16) 7,214 பேர் கொண்ட குழு பனி லிங்கத்தைத் தரிசனம் செய்யப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை மொத்தம், 2,02,705 பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமர்நாத் தரிசனம் ஆகஸ்ட் 7ம் தேதி முடிவடையவுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon