மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இலவச மொபைல் சேவைகளுக்கு முடிவா?

இலவச மொபைல் சேவைகளுக்கு முடிவா?

மொபைல் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்க தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்துள்ளது.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு சேவையில் களமிறங்கியது. அதிவேக இலவச டேட்டா, இலவச எஸ்.எம்.எஸ், இலவச அழைப்புகள் என்று இலவசமாகவும், குறைந்த கட்டணங்களிலும் ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கியது. மேலும் மொபைல் அழைப்புகளுக்கு எப்போதுமே கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது எனவும் ஜியோ உறுதியளித்தது. இதனால் ஜியோவின் வாடிக்கையாளர் பட்டாளத்தில் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் சலுகைகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதேபோல் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் லாபம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளன. இதனால் மொபைல் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க மொபைல் சேவை நிறுவனங்கள் டிராயிடம் கோரிக்கை விடுத்தன. எனவே குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஜூலை 21ஆம் தேதி டிராய் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணங்களின் முக்கியத்துவம் பற்றி கேள்விகள் எழுப்பப்படும். அதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உரிய விளக்கங்கள் தர வேண்டும். மேலும் அதிகபட்ச கட்டண வரம்புகளை நிர்ணயிப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் மூலம் இலவச சேவைகளுக்கு ஒரு முடிவு கொண்டு வர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon