மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சுவாதி கொலையான ரயில் நிலையத்தில் கேமராக்கள்!

சுவாதி கொலையான ரயில் நிலையத்தில் கேமராக்கள்!

சுவாதி கொலையான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக 13 கண்காணிப்பு கேமராக்கள் இன்று(ஜுலை,17) பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி (24) நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம் குமார் என்பவரைப் போலீஸார் கடந்த ஜூலை 1ஆம் தேதி கைது செய்தனர். அந்த ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ராம் குமார் அடையாளம் காணப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ராம் குமாரைப் பிடிக்கப் போலீஸார் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதற்கு ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே காரணம் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கப்பட்டது.

எனவே, பயணிகள் அதிகம் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் 82 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மே 25 ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பு கண்காணிப்புக் கேமராக்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக இன்று(ஜுலை,17) 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 10 கண்காணிப்பு கேமராக்கள் ஓரிரு நாட்களில் பொருத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ‘30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் 10, நடை மேம்பாலத்தில் 3 என மொத்தம் 13 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon