மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

திருப்பதி : முதல் 20,000 பேருக்கே திவ்ய தரிசனம்!

திருப்பதி : முதல் 20,000 பேருக்கே திவ்ய தரிசனம்!

திருப்பதியில் வாடகை அறையை முன்பதிவு செய்ய ஆதார் எண்ணைப் பதிவு செய்யும் முறை ஜூலை 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதயாத்திரை வரும் 20,000 பக்தர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கும் நடைமுறை இன்று (ஜூலை,17) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாகப் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பாதையில் சாதாரண நாட்களில் 30,000 பேரும், விடுமுறை நாட்களில் 45,000பேரும் தரிசனத்திற்காக நடந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலால், தரிசனத்திற்கு 10 மணி நேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்குப் பால், டீ, உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களில் முதல் 20,000 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். அதன்படி திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் 15,000 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாரிமெட்டில் 5,000 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். அதன்பின்னர், வரும் பக்தர்கள் பொது தரிசனத்தில் செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த நடைமுறை இன்று (ஜூலை,17) முதல் அமல்படுத்தப்பட்டது.

கடந்த மாதம்,வரிசையில் நிற்கும் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவதால், பால், டீ, உணவு உள்ளிட்டவையுடன் 24 மணி நேரம் மருத்துவ வசதியும் வழங்கப்படும் எனத் தேவஸ்தான அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon