மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது!

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது!

இன்று, ஜூலை 17ஆம் தேதி, 19வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சில பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் கூட, பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர் சந்தித்து வருகின்றனர். ஜவுளித் துறை, திரைத்துறையினர் உள்ளிட்ட பல தரப்புகளிலும் வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. மளிகைக் கடைகள் மற்றும் நகைக்கடைகள் கூட்டம் இன்றி காணப்படுகின்றன. அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை 17) ஜி.எஸ்.டி கவுன்சிலின் 19வது கூட்டம் கூடுகிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த இரண்டு வாரங்களில் ஜி.எஸ்.டி-யின் தாக்கம் என்ன என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்தக் கூட்டம் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வரி விகிதங்கள் ஏதும் மாற்றியமைக்கப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன் ஜூன் 30ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கூடியது. பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி கூட முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது ஜி.எஸ்.டி-யின் தாக்கம் குறித்து மட்டும் விவாதிக்க வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “திங்கள் கிழமையன்று (ஜூலை 17) நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 19வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon