மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கருணாநிதி வாக்களிக்க வருவாரா?

கருணாநிதி வாக்களிக்க வருவாரா?

நாட்டின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான பாஜக சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, மீரா குமாருக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது. மீரா குமாரும் தமிழகம் வந்து திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றுச் சென்றார்.

இதற்கிடையே இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் பல குடியரசு தலைவர்களை உருவாக்க முக்கிய பங்காற்றியவரும், தமிழகச் சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கருணாநிதி உடல்நலக்குறைவுக் காரணமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற அவரின் சட்டமன்ற வைர விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்தால் மட்டுமே கருணாநிதியைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்ற கேள்விக்கு நேற்று ஜூலை 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பதிலளித்த ஸ்டாலின், “குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது குறித்து நாளை தெரியும்” என்று கூறினார். இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “கருணாநிதி வாக்களிக்க வாய்ப்புகள் இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாளில்தான் (இன்று) இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவ ஆலோசனைப்படி கருணாநிதி வாக்களிக்க வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon