மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: சென்னைக்காகக் காவு வாங்கப்படும் கடலூர்!

சிறப்புக் கட்டுரை: சென்னைக்காகக் காவு வாங்கப்படும் கடலூர்!

சென்னை மக்களின் தாகத்தை தணிக்க, கடந்த 2003 பிப்ரவரி 2ஆம் தேதி புதிய வீராணம் திட்டத்தை ரூ.720 கோடியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அடிக்கல் நாட்டவந்த முதல்வருக்கு அப்போது மாவட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அழகிரி கறுப்புக்கொடிக் காட்டமுயன்று 200 விவசாயிகளுடன் கைதானார். வீராணத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டு போவதால், வீராணத்தை நம்பி வாழும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

14 வருடங்களாக கடலூர் மாவட்டத்தின் தண்ணீர் உறிஞ்சப்பட்டுச் சென்னைக்கு அனுப்பப்படுவதால் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது கடலூர். இன்று மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுப்பதில்லாமல், சேத்தியாதோப்பிலிருந்து பண்ருட்டி வரையில் 46 ஆழ்குழாய் போர் போட்டு ராட்சத மோட்டார்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரையும் உறிஞ்சியெடுத்தது அரசு. மேலும் ஆட்சியாளர்கள் அப்போது, “புதிய வீராணம் திட்டத்தால், சென்னை மக்களுக்குத் தண்ணீர் தொடர்ந்து எடுக்கமாட்டோம். அதேபோல் ஆழ்குழாய் போரிலிருந்து தேவைப்படும்போது மட்டும் எடுக்கப்படும்” என்றார்கள்.

ஆனால் இப்போதைய நிலைமை என்ன?

நெய்வேலி அருகில் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி வாசுதேவன், “கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி தொகுதி, குறிஞ்சிப்பாடி தொகுதி, நெய்வேலி தொகுதியில் ஒரு ஊராட்சிக்கு இரண்டு, மூன்று குளங்கள் இருக்கும். மழைக்காலங்களில் குளத்தை நிரப்பிப் பாதுகாப்போம். அந்தக் குளத்துத் தண்ணீரில்தான் குடிப்போம்; குளிப்போம். ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம், முந்திரிக்கு மருந்து அடிக்க, குளத்துத் தண்ணீரை மாட்டு வண்டியில் எடுத்துப் போவோம். தற்போதும் குளங்களைப் பாதுகாத்து வருகிறோம். ஆனால், ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. கால்நடைகளும் பறவைகளும் தாகத்தைத் தீர்க்கமுடியாமல் தவிக்கின்றன. காரணம், புதிய வீராணம் திட்டம் என்று 46 ஆழ்குழாய் போர் போட்டு தினந்தோறும் தண்ணீரை உறிஞ்சி சென்னைக்கு எடுத்து போகிறார்கள். புதிய வீராணம் திட்டத்தை எப்போது தொடங்கினார்களோ... அன்று முதல் இன்று வரையில் வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. கடந்த 14 வருடமாக 46 ஆழ்குழாய் போரிலிருந்துதான் சென்னைக்குத் தண்ணீர் எடுத்துபோகிறார்கள். அதனால்தான் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. விருத்தாசலம் தாண்டினால் 1,600 அடி போர் போட்டாலும் அனல் காற்றுதான் வருகிறது; தண்ணீர் கிடைக்கவில்லை’’ என்றார்.

உழைக்கும் சமுதாயத்துக்காகப் போராடும் எழுத்தாளர் சீ.நல்லரசன், “கடலூர் மாவட்டத்தில் 25 வருடங்களுக்கு முன்பு பல இடங்களில் ஆர்ட்டிசியன் ஊற்றுகள் இருந்தன. அதாவது, இயற்கையாகவே பொங்கிவரும் ஊற்றுகள். மின்மோட்டார் இல்லையென்றாலும் கவலைப்படாமல் இந்த ஊற்றுகளை நம்பி பாசனம் செய்தார்கள். குளிக்க, மற்ற தேவைகளுக்குத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். கடலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் நொச்சிகாடு என்ற கிராமத்தில் ஆர்ட்டிசியன் ஊற்றுத் தண்ணீர் 10 அடி உயரத்தில் பீறிட்டு வந்ததை பல ஊர் மக்கள் அதிசயமாகவும் பார்த்தார்கள். அன்று 20 அடியில் தண்ணீர் கிடைத்த ஊர்களில் தற்போது 200 அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. காரணம், புதிய வீராணம் திட்டம்தான். 46 ஆழ்குழாய்களில் பெரிய மின்மோட்டர்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சியெடுக்கிறார்கள். மறுபக்கம் என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினர் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அளவுக்குத் தண்ணீரை எடுத்து வருகிறார்கள். அதன் விளைவுதான் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது” என்றார்.

அன்று புதிய வீராணம் திட்டத்தை எதிர்த்துப் போராடிய முன்னாள் எம்.பி. அழகிரியிடம் பேசினோம். “வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துப் போவதாகச் சொல்கிறார்கள். அதுக்கு ஏன் சேத்தியாத்தோப்பு டு பண்ருட்டி வரையில் வரிசையாக 46 ராட்சத போர் போட்டார்கள் என்று கேட்டோம். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘ஆழ்குழாய் போரிலிருந்து நிரந்தரமாக எடுக்கமாட்டோம்; தேவைப்படும்போது மட்டும் எடுப்போம்’ என்று அறிக்கை விட்டார். ஆனால், இப்போது தினந்தோறும் தண்ணீரை உறிஞ்சி வருகிறார்கள். அரசிடம் மாற்று திட்டமும் இல்லை. தண்ணீரை உறிஞ்சி எடுப்பவர்கள், அதை நிரப்புவதற்குப் புதிய தொழில்நுட்பங்கள் இருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை. ஏரி குளங்களை ஆழப்படுத்தி 300 அடிக்குப் பூமியில் பைப் இறக்கினால், மழைக்காலங்களில் குளம் ஏரி நிரம்பி, பைப் மூலமாக நிலத்தடிக்கு போய்சேரும். நீர்மட்டம் உயரும். அதேபோல் என்.எல்.சி. நிர்வாகமும் அப்படிச் செய்யலாம். ஆனால், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தண்ணீரை சேமிக்கிறோம் என்று சும்மா பெயரளவில் 10 அடி ஆழத்தில் பைப் இறக்கிட்டு கொள்ளையடித்துட்டு போகிறார்கள். புதிய வீராணம் திட்டத்தில், 46 ஆழ்குழாய்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு 9 கோடி லட்சம் லிட்டர் தண்ணீரைச் சென்னைக்குக் கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. அப்படி என்றால் மாதம் 270 கோடி லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி வருபவர்கள், கடந்த 14 வருடத்தில் எவ்வளவு எடுத்திருப்பார்கள் கணக்கு போட்டுப் பாருங்கள். நெஞ்சம் பதறுகிறது. அதை ரீ-புல்லிங் செய்ய எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலை நீடித்தால் கடலூர் மாவட்ட மக்களுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது. கால்நடைகள் குடிநீரின்றி மரணமாகும். விவசாயம் கேள்விக்குறியாகிவிடும்” என்றார்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும், நான்கு திமுக எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள். இவர்கள் புதிய வீராணம் திட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் மக்கள். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தலைவியின் சாதனை என்று சொல்லப்படும் திட்டத்தை எதிர்க்கத் துணிவின்றி இருக்கிறார்கள். எதிர்க்கட்சியான திமுக என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேட்கிறார்கள் மக்கள்.

கடலூர் மாவட்டத்தில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீருக்குப் பதிலாக ரீபுல்லிங் சிஸ்டம் பற்றி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி யோசிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கடலூர் மக்களின் கோரிக்கை. இல்லையென்றால் சென்னைக்குத் தண்ணீர் கொடுத்தே செத்துப் போய்விடும் கடலூர்.

- காசி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon