மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்!

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் வேளையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் இறந்த வினோத் கண்ணா, அனில் மாதவ் தேவே, காங்கிரஸ் எம்.பி. பல்வை கோவர்தன் ரெட்டி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று முதல்நாள் அவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம், காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள்மீது தீவிரவாதிகள் தாக்குதல், சீனப் பிரச்னை, பசு பாதுகாப்பு பெயரில் குண்டர்கள் தாக்குதல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

மேலும், துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற எதிர்க்கட்சியினர் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தைத் தர முடிவு செய்தன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று ஜூலை 16ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீர் விவகாரம், அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதல், சீனாவுடன் இந்தியாவின் நிலை ஆகிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் எழுப்பும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கான அனைத்துக் கதவுகளையும் அடைத்து விட்டது. இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் செய்வதறியாது திணறி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, “வேலைவாய்ப்புகளில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வாய்ப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர்கள் ஊழல் செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்தக் கட்சியின் எம்.பி-க்கள் ஆளும்கட்சிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலம், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் மழைவௌ்ளச் சேதம், மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து அமைக்கக் கடந்த இரு மாதத்துக்கும் மேலாக நடந்துவரும் போராட்டம், ரூபாய் நோட்டுத் தடையால் ஏற்பட்ட பிரச்னைகள், வேலை இழப்புகள், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல், சமீபத்தில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றது குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே “மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 42 மசோதாக்களும் கிடப்பில் உள்ளதால் அதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அப்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “மழைக்காலக் கூட்டத்தொடரை ஆக்கபூர்வமான வகையில், சுமுகமாக நடத்த அரசு விரும்புகிறது. நடப்பு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், அதுகுறித்து அவையின் அலுவல் ஆலோசனைக்குழுவினர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon