மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் குவியும் பணம்!

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் குவியும் பணம்!

ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.64,564 கோடியாக உயர்ந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, நிதியமைச்சகம் அளித்துள்ள பதில்களைக் காண்போம்.

‘ஜன் தன் திட்டத்தில் எவ்வளவு வங்கிக் கணக்குகள் உள்ளன?’ என்ற கேள்விக்கு, ‘ஜூன் மாதம் 14ஆம் தேதி கணக்குப்படி இத்திட்டத்தில் 28.9 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன’ என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் 23.7 கோடி வங்கிக் கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும், 4.7 கோடி வங்கிக் கணக்குகள் ஊரக வங்கிகளிலும், 92.7 லட்சம் வங்கிக் கணக்குகள் தனியார் வங்கிகளிலும் உள்ளன.

‘இந்த வங்கிக் கணக்குகளில் மொத்தம் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன?’ என்ற கேள்விக்கு, ‘ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது’ என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.50,800 கோடியும், ஊரக வங்கிகளில் ரூ.11,683 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.2,080 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஜன் தன் திட்டத்தில், 25.58 கோடி கணக்குகள் இருந்தன. அப்போது இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ.64,252 கோடியாகும். அதற்குப் பிறகு இன்றுவரை இந்த வங்கிக் கணக்கில் அதிகரித்துள்ள பணத்தின் மதிப்பு ரூ.311.93 கோடியாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசால் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பழிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon