மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஸ்டாலின் ஆதரவு : விஸ்வரூபமாகும் கமல்

ஸ்டாலின் ஆதரவு : விஸ்வரூபமாகும் கமல்

நடிகர் கமல்ஹாசனுக்கும் அமைச்சரவைக்கும் இடையே நடந்துவந்த மோதலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்க விஸ்வரூபம் ஆகியுள்ளது விவகாரம்.

நடிகர் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் நிலையில்… அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், நடிகை ஓவியா பற்றி ‘சேரி பிஹேவியர்’ என்று சொல்லிவிட, இது சர்ச்சையானது. இதற்கு பல சமூக அமைப்புகளும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார். மேலும், “சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி இப்போது சொல்கிறார். நான் ஒரு வருடம் முன்பே சொன்னேன்’’ என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து கமலுக்குக் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “கமல்ஹாசன் தனது ‘பிக் பாஸ்’ டி.ஆர்.பி. ரேட் ஏற வேண்டும் என்பதற்காக தமிழக அரசின்மீது சேற்றை வாரி இறைக்கக் கூடாது’’ என்று கூறினார். இவரை அடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கமலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “அவனெல்லாம் ஒரு ஆளே கிடையாது’’ என்று கமலுக்கு எதிராக ஒருமையில் பேசினார்.

இதற்குக்கூட கமல் பதில் அளிக்கவில்லை. ஆனால், தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து கமல்ஹாசனைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வருகின்றனர்.

நேற்று ஜூலை 16ஆம் தேதி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் அங்கே சாதி பாகுபாட்டைத் தூண்டுவது போல பேசுகிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும், “கமல் பொறுப்பாக இருக்க வேண்டும். சினிமாவுக்கு விருதுகள் அறிவித்த நிலையில் சினிமா உலகமே கோட்டைக்கு வந்து முதல்வருக்கு நன்றி சொல்கிறது. ஆனால், கமல்ஹாசனுக்கு பாராட்டுகிற மனம் இல்லை’’ என்று கூறினார்.

இப்படியாக கடந்த சில நாள்களாக தமிழக அமைச்சர்கள் பரவலாக கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததன் மூலமே செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஜூலை 16ஆம் தேதி மாலை இந்த விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிட்ட பிறகுதான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் கமல்ஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காக அவரைப் பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப் பார்க்கிறார்கள்.

திரு.கமல்ஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி - குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.

தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை அமைச்சர்களும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார்.

அதற்காக அவர்மீது வன்மம்கொண்டு குதிரைபேர - பினாமி அரசின் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும் மிரட்டுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இப்படி பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதைவிட அடாவடி செயலாகும். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல்ஹாசனின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரலாகும். அதை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள், இந்த ஆட்சி இன்னும் எத்தனை காலம் என்பதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ளட்டும்’’ என்று கமல்ஹாசனுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இந்த அறிக்கை வந்த சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கமல். கூடவே அமைச்சர்களுக்கும் கடுமையான முறையில் தன் பாணியில் பதில் தெரிவித்துள்ளார்.

“அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும்கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’’ என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

இதன்மூலம் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதையே தனது ட்விட்டர் செய்தியாக சொல்லியிருக்கிறார் கமல்.

இந்த விவகாரம் இன்னும் என்னென்ன விஸ்வருபம் எடுக்கப் போகிறதோ?

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon