மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை:தமிழகத்தின் சொத்தைத் தேடி..!

சிறப்புக் கட்டுரை:தமிழகத்தின் சொத்தைத் தேடி..!

தமிழக அரசின்மீது தெளிக்கப்படும் மத்திய அரசின் தொடர் வன்மத்துக்கு மிகச்சரியான பதிலடியாக அமைந்தது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற சென்னை மெரினா போராட்டம். மெரினா கடற்கரையில் நடந்ததால் இந்தப் போராட்டத்துக்கு இப்படிப் பெயர் கிடைத்ததே தவிர, அதில் கலந்துகொண்டவர்கள் தமிழகத்தின் இண்டு இடுக்கிலிருந்து மொத்தமாய், தன்னெழுச்சியாய் எழுந்த தமிழக மக்கள்தான் என்பதை மறந்துவிட முடியாது. ஆனால், இந்தப் போராட்டம் குறித்த பதிவுகள் எங்கே இருக்கின்றன? என்று தேடினால் விடை கிடைப்பது அத்தனை எளிதல்ல. யூடியூப் - ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பல இருந்தாலும், மெரினா போராட்டத்துக்கு சரியான ஆவணம் இல்லையென்ற குறை மீதமாய் இருந்தபோது ‘ஜல்லிக்கட்டு ஜன 5-23 2017’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறதென வெளியான தகவல் அளித்த மகிழ்ச்சி எல்லையற்றது. ஆனால், இது எப்படி சாத்தியம் என்று இந்தப்படத்தை உருவாக்குபவர்கள் பற்றிய தகவலைத் தேடிச் சென்றேன்.

‘ஜல்லிக்கட்டு ஜன 5-23 2017’ படத்தின் இயக்குநர் சந்தோஷ், அதன் தயாரிப்பாளர் நிருபமாவிடம், “ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தளவுக்கு பிரமாண்டமான ஒன்றாக மாறும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், நீங்கள் எப்படி அத்தனை நிகழ்வையும் ஆவணப்படுத்தினீர்கள்?” என்று கேட்டபோது சந்தோஷ் விளக்கினார். நாங்களும் எல்லோரையும்போல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவுக்குச் சென்றோம். ஆனால், அங்கு நடைபெற்றது போராட்டமல்ல, புரட்சி. இத்தனை பெரிய தன்னெழுச்சி, எங்களுக்கு உடனே நினைவுபடுத்தியது நியூயார்க்கில் நடைபெற்ற வால்-ஸ்ட்ரீட் புரட்சியைத்தான். அந்தப்புரட்சி நடைபெற்றபோது, இப்போது இருக்கும் அளவுக்கு டெக்னாலஜி உதவுகள் இல்லாததால் எழுத்தளவில் பதிவும், போட்டோக்களும் மட்டுமே இருந்தன. அப்படிப்பட்ட நிலையிலும், அந்தத் தன்னெழுச்சியை அற்புதமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம் நம்மிடம் இத்தனை டெக்னாலஜி வளர்ச்சிகள் இருக்கும்போதும், போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் நின்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கேமராக்களுடன் களத்தில் இறங்கினோம். அதன்பின் அந்தப் பதிவுகளைப் பார்த்தபோது, தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு பதிவு எங்கள் கையிலிருப்பதை உணர்ந்தோம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பதிவை உலக மக்களிடம் காட்டி, தமிழினத்தின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றிய பின்னர்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் முழு வெற்றியடையும் என்பதை உணர்ந்து வேலை செய்யத் தொடங்கினோம் என்று இயக்குநர் - தயாரிப்பாளர் என்ற எல்லையைத் தாண்டி சமூக பொறுப்புணர்வுடன் இருவரும் பதில் கூறினார்கள்.

இவர்களிருவரிடமும் பேச வேண்டும் என்ற முடிவு தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைத்ததும் திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல. முதன்முதலில் ஜல்லிக்கட்டு ஜன 5-23 2017 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நியூயார்க்கின் வால்-ஸ்ட்ரீட் போராட்டம் நடைபெற்ற இடத்தில் வெளியிட்டபோதே தோன்றியது. அதன்பின், நைரோபியிலிருக்கும் ஐ.நா. செயலகத்தில் நடைபெறும் இளைஞர்கள் மாநாட்டில், இப்படத்தின் டீசர் வெளியிட அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவித்தபோதும் தோன்றியது. கடைசியாக ஆப்பிரிக்காவின் மசாய்மாரா பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரியவந்தபோது இனியும் காத்திருக்க வேண்டாம் என்று தோன்றியதால், இயக்குநர் சந்தோஷை சந்தித்துப் பேசினேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளிலேயே படக்குழு சுற்றிக்கொண்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என்பது முதல் காரணம். ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இந்தப் படத்தில் முன்நிறுத்தப்போகிறார்களா? அல்லது தலைவனே இல்லாத போராட்டத்துக்கு கற்பனையாக ஒரு தலைவனை உருவாக்கப்போகிறார்களா?’ என்ற கேள்வி ஒரு பக்கமென புதிர்களின் மொத்த சேர்க்கையாக ஜல்லிக்கட்டு ஜன 5-23 2017 திரைப்படத்தின் அறிவுப்புகள் இருந்தன.

சந்தோஷிடம் கேட்ட முதல் கேள்வியே மசாய்மாராவில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்பதுதான். அதிலும் Hot Air Balloon எனப்படும் பறக்கும் பலூனிலெல்லாம் படமெடுக்குமளவுக்கு அங்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி பிரதானமாகத் தோன்றியது.

மசாய்மாரா தமிழ் சினிமாவுக்கு இதுவரை எவ்விதத்திலும் சம்மந்தப்பட்ட ஒன்றல்ல. ஏன், பறக்கும் பலூனில் படமாக்கப்பட்டிருக்கும் அந்தக்காட்சிகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும்கூட எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால், இவை அதற்கும் தமிழகத்தின் மாடுகளுக்கும் அதிக சம்மந்தம் இருக்கிறது. மசாய்மாராவிலிருக்கும் மாடுகளின் டி.என்.ஏ. தமிழகத்திலிருக்கும் விருமாண்டி என்ற காளையின் டி.என்.ஏ-வுடன் கொஞ்சமாக அல்ல, 100% பொருந்துகிறது. இந்தத் தகவலை கார்த்திகேய சிவசேனாதிபதி எங்களிடம் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்தத் தகவலை படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதால் மசாய்மாராவுக்குச் சென்று பதிவு செய்தோம்.

அந்த மக்கள் இந்த உலகத்துடன் எந்தவகையிலும் தொடர்பில்லாதவர்கள். அவர்களது உயிரைவிட மாடுகளின் உயிரை மதிக்கிறார்கள். ஓர் ஏக்கர் பரப்பளவில் வட்டமாக வீடுகளை அமைத்துக்கொண்டு, அந்த வட்டத்தின் மையத்தில் அனைவரது மாடுகளையும் ஒன்றாகக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதற்குக்காரணம், காட்டு விலங்குகள் மாடுகளை அடித்துத் தின்றுவிடக் கூடாது என்பதுதான். ஒவ்வொருவரது மாடுகளையும் இனம்கண்டுகொள்ள அவற்றின்மீது குறியீடுகளை வரைந்திருக்கிறார்கள். அங்கு இருக்கும் மாடுகளின் டி.என்.ஏ-வை பரிசோதித்துப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாமல், அவை தமிழகத்திலிருக்கும் மாடுகளைப்போல தோற்றம் கொண்டிருப்பதே, இரு பகுதிகளுக்குமிடையேயுள்ள தொடர்பை விவரித்து விடுகின்றன.

முதலில் ஜல்லிக்கட்டு என்றதும், மேற்கு நாடுகளின் நடைபெறுவதுபோல மாடுகளைக் கொன்றுவிடுவீர்களா என்று கேட்டார்கள். பிறகு, விளக்கிச்சொன்னதும் சிரிக்கிறார்கள். அரசாங்கம் என்றால் என்னவென்று கேட்கிறார்கள். அதை விளக்கிச்சொன்னதும், அங்கிருந்த ரேஞ்சரை தங்களது அரசாங்கம் என்று குறிப்பிடுகிறார்கள். இப்படித்தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. மாடுகளை இப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை. அங்கிருக்கும் சிறு குழந்தைகளுக்குக்கூட மாடுகளை கவனித்துக்கொள்ளத் தெரிகிறது. ஆனால், இந்தியா போன்ற நாட்டில் எங்கிருந்தோ வரும் ஓர் அமைப்பு, இதைச் செய்யக் கூடாது, அதைச் செய்யக் கூடாது என கட்டளைகளை விதிக்கிறது. இந்நிலையை எடுத்துச் சொல்லவே மசாய்மாராவில் படப்பிடிப்பை நடத்தினோம்.

சந்தோஷின் இந்த விளக்கம் திருப்தியானதாக இருந்தாலும், அந்த இடத்தை எப்படித் தமிழகத்துடன் இணைக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது. படத்தின் கதையைக் கேட்கிறோமோ என்று தெரிந்தாலும், இந்த கேள்வி தேவையானதாக இருந்தது. சந்தோஷும் தவிர்த்துவிடாமல் பதில் சொன்னார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தன்னெழுச்சியாக நடந்தாலும், அதில் கலந்துகொண்டவர்களுக்கெல்லாம் பின்னணியில் ஏதோ ஒன்று ஜல்லிக்கட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய விதத்தில் இருந்தது தவிர்க்கமுடியாத உண்மை. அது அதிகாரத்தால் அடக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அடிப்படை உரிமைகளை மறுக்கப்பட்டதாலும் இருக்கலாம். ஆனால், தொடர்பு உண்டு. ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். அந்தப் போராட்டத்துக்கென யாரும் உரிமை கொண்டாடிக் கொள்ளவில்லை. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஐந்து அணிகளின் கதையை ஜல்லிக்கட்டுக்கு பிறகு படமாக்கினோம். உணவு, பாதுகாப்பு, குடிநீர், தங்க இடம் கொடுத்தவர்கள் இப்படி ஐந்து கதைகளை தேடிப்பிடித்து அவற்றை ஒன்றிணைத்து ஜல்லிக்கட்டு ஜன 5-23 2017 என்ற படமாக உருவாக்குகிறோம். ஐந்து அணிகள் என்று சொன்னதை குறித்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். தனி மனிதர்கள் யாரையும் ஹீரோவாகக் காட்டுவதில்லை என்ற முடிவை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றியே நமக்குக் காட்டிவிட்டதால், தனி ஹீரோவை உருவாக்க முடியாதல்லவா? என்று நம்மையே கேள்விக்குள் இழுத்தார்.

அவரது கேள்விக்குக் கண்டிப்பாக முடியாது என்று சொல்லிவிட்டு, ‘ஜல்லிக்கட்டுப் படமாகும்போது யாராவது உரிமை கொண்டாடிக்கொண்டு வருவார்களே?’ என்ற கேள்வியை முன்வைத்தேன். சந்தோஷை மடக்கிவிட்டு நிருபமா பதிலளித்தார். படத்துக்கு புரமோஷன் ஸ்டார்ட் பண்ணவே இல்லை. அதுக்குள்ள ஒருத்தர் போன் போட்டு ‘எங்களைக் கொஞ்சம் தூக்கி வெச்சு படம் எடுத்தா நல்லது’ன்னு சொன்னார். அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டோம். அவ்வளவு பெரிய புரட்சியை தானாகவே செய்தோம்னு சொல்றதுதான் பெருமைன்னுகூட தெரியாம இந்த மாதிரி சிலர் இருப்பாங்க. ஆனால், எதிர்ப்பு ஏற்படக்கூடிய எல்லா அம்சத்தையும் கணக்குல வெச்சு, அதை பிரேக் பண்ணத் தேவையான முயற்சிகளையும் எடுத்துக்கிட்டு இருக்கோம் என்று நிருபமா கூறியபோது, தமிழகத்தில் சென்சார் போர்டு போல செயல்படும் சிலரால் இந்தப் படத்துக்கு ஏற்படும் எதிர்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது தெரிந்தது.

ஐ.நா-வில் ட்ரெய்லர் ரிலீஸ் செய்வது கடைசியாக வைத்திருந்த கேள்வி. ஏனென்றால் ஐ.நா-வில் அடுத்த மாதம்தான் இளைஞர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதில் ட்ரெய்லரை வெளியிடுவதாகச் சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்தே படமெடுத்து அனுப்பியிருப்பது குழப்பமாக இருந்தது. ஒருவேளை கோபப்பட்டாலும், நமக்கு கிடைக்கவேண்டிய தகவல்களில் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இந்தக்கேள்வியைக் கடைசியாக வைத்திருந்தோம். அதற்கும் ஒளிவு மறைவின்றி சந்தோஷ் பேசினார். நாங்கள் நியூயார்க் வால்-ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல இடங்களிலும் படமெடுத்தபோது ஆதரவு மட்டுமே கிடைத்தது. அப்படியொரு நண்பர் இந்தப் படத்தைப்பற்றி கேட்டபோது விளக்கிக் கூறினோம். அவர்தான் அடுத்த மாதம் நைரோபியில் நடைபெறும் இளைஞர்கள் மாநாட்டில் ட்ரெய்லரை வெளியிட உதவிகளைச் செய்தார். ஐ.நா-வின் இளைஞர்கள் மாநாட்டில் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்பற்றி பேசுவது தமிழர்களுக்குக் கிடைக்கும் பெருமை. ஆனால், அதற்கான வெளிப்புற காட்சிகளை படமாக்க, இளைஞர்கள் மாநாடு தொடங்கியதும் வாய்ப்பிருக்காது என்பதால் இப்போதே படமாக்கிவிட்டோம். மாநாட்டில் ஜல்லிக்கட்டு படம் பற்றிப் பேசுவதைப் படத்திலும் பதிவு செய்வோம் என்றார்.

கையிலிருந்த கேள்விகள் முடிந்துவிட்டாலும், வேண்டிய தகவல்கள் கிடைத்துவிட்டாலும் ஒரு கேள்வி கடைசி நேரத்தில் தோன்றியது. ‘போராட்டத்துல கலந்துகொண்ட எல்லோரையும் ஒரே காட்சியில் படமாக்கியிருக்கிறீர்களா?’ என்பது அந்த கேள்வி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை விதவிதமான பல கேமராக்களில் எடுத்திருக்கிறோம். அவற்றை படத்தில் சேர்க்கும்போது, ஸ்க்ரீனில் எப்படித் தெரிகிறது என்று பார்க்கவேண்டிய அவசியம் இருந்ததால், பத்து நிமிட காட்சியை தியேட்டரில் ஒளிபரப்பிப் பார்த்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கண்களை மூடி யோசித்துப் பாருங்கள். பத்து லட்சம் மக்கள் ஒரே குரலில் “பீட்டா ஒழிக... பீட்டா ஒழிக” என்று கத்தினால் எப்படியிருக்கும்? எனக்கு புல்லரித்துவிட்டது. இது எங்களது படைப்பல்ல. எங்கள் சொத்து என்று பதில் கூறினார் சந்தோஷ்.

“மிஸ்டர் சந்தோஷ், இது உங்கள் சொத்து மட்டுமல்ல. தமிழகத்தின் சொத்து” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். உலகமே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை திரும்பிப்பார்த்தாலும், அவர்கள் பார்த்தது தேசிய ஊடகங்களை மட்டும்தான். அவற்றில் பல ஒரு லட்சம்... இரண்டு லட்சம்... என ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை சுருக்கிவிட்டார்கள். மீடியாவைத் தவிர வேறு யாரிடமும் இதன் முழு வீடியோ பதிவு இல்லை என்ற நிலை இப்போது மாறிவிட்டது. உலகம் அறிய எத்தனைத் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தங்களது மாடுகளையும், உரிமையையும் காக்க தன்னெழுச்சியாய் திரண்டார்கள் என்ற ஆவணம் இப்போது நம்மிடம் இருக்கிறது. இதனால்தான் இந்தப் படத்தை ‘தமிழகத்தின் சொத்து’ என்று குறிப்பிட்டேன். வாசகர்களிடம் இதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்றும் நம்புகிறேன்.

- சிவா

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon