மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

நிலுவையிலுள்ள அரசுத்துறை வழக்குகள்!

நிலுவையிலுள்ள அரசுத்துறை வழக்குகள்!

மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட ஆவணத்தின்படி நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசுத்துறை வழக்குகளில் அதிக அளவில் ரயில்வே துறையின் வழக்குகள் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம், இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டுள்ள ஓர் ஆவணத்தில், அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட ஆவணத்தில், மொத்தம் 1,35,060 அரசு வழக்குகளும், அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக 369 அவதூறு வழக்குகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் மிக அதிக எண்ணிக்கையில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் அரசுத்துறையான ரயில்வே துறை உள்ளது. ரயில்வே துறைக்கு எதிராக 66 ஆயிரத்து 685 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், 10 வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் மட்டும் 10,464 வழக்குகள் உள்ளன. ரயில்வே துறைக்கு அடுத்த நிலையில், நிதி அமைச்சகம் தொடர்பாக 15,646 வழக்குகளும், தகவல் தொடர்பு அமைச்சகம் தொடர்பாக 12,621 வழக்குகளும், உள்துறை அமைச்சகம் தொடர்பாக 11,600 வழக்குகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இப்படி அரசு வழக்குகள் பெருமளவில் நிலுவையில் உள்ளது பற்றி கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “அரசு மிகப் பெரிய வழக்குதாரராக உள்ளது. இந்த வழக்குகளில் அரசு ஒரு கட்சிக்காரராக உள்ள நிலையில், இந்த வழக்குகளிலேயே நீதிமன்றம் பெரும்பகுதி நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார். அதே போல, நிலுவையில் உள்ள அரசு வழக்குகள் குறித்து, அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “அரசுக்கு எதிரான வழக்குகள் மிக கவனமுடன் கருத்தில் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் சுமை குறையும்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon