மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சசிகலா வேறு சிறைக்கு மாற்றமா?

சசிகலா வேறு சிறைக்கு மாற்றமா?

தற்போதைய நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புயலைக் கிளப்பிவருவது சிறையில் சசிகலாவுக்குச் சலுகை கொடுக்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா தாக்கல் செய்துள்ள அறிக்கைதான். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்ற ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டதில், ‘சசிகலாவுக்குச் சிறையில் தனி சமையலறை, விரும்பும் உணவு, சமைக்க சிறை கைதிகள்’ என சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூபாய் 2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், டி.ஜி.பி. தத்தா, உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அறிக்கை அனுப்பினார். ஆனால், இதை மறுத்த சிறைத்துறை டி.ஜி.பி., ‘தாம் ஏற்கெனவே டி.ஐ.ஜி. ரூபாவுக்கு இரண்டு முறை மெமோ கொடுத்ததாகவும், இதற்கு பழி வாங்கவே தம்மீது குற்றம் சுமத்துவதாகவும்' தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இதுகுறித்த விசாரணை நடத்த அம்மாநில உள்துறை மூத்த அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, “கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சசிகலாவுக்குச் சலுகை அளிக்கப்பட்டதற்கு அதிகாரிகள் ரூபாய் 2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி வருகின்றனர். இதுகுறித்த விசாரணை நேர்மையாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று கூறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் ஜூலை 15ஆம் தேதி சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய பின், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணா குமாருடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். டி.ஜி.பி. சென்றவுடன் அங்கு வந்த டி.ஐ.ஜி. ரூபாவை, சூப்பிரண்டு தடுத்துள்ளார். ஆனால், அதைத் தாண்டி ரூபா சிறையில் ஆய்வு செய்துள்ளார். மேலும், அவர் அனுப்பியுள்ள இரண்டாவது அறிக்கையில், “கடந்த வாரம் நான் சிறையில் ஆய்வு செய்தபோது கண்டறிந்த பல விஷயங்கள் ஆதாரமின்றி அழிக்கப்பட்டுள்ளன. சசிகலா தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சிறை அதிகாரிக‌ளே அழித்துள்ளனர். சசிகலா இருக்கும் இடத்தை சிசிடிவி கண்காணிப்பில் இருந்து விலக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறைத்துறை அதிகாரி வீரபத்ர சாமி திடீரென சிறையில் ஆய்வு நடத்தினார். இதில் பல சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்பக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சசிகலாவுக்குச் சிறையில் சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு மட்டங்களில் பிரச்னை உள்ளன. ஒன்று அதிகாரிகளுக்கு இடையிலான பிரச்னை. டி.ஐ.ஜி. ரூபாவுக்கும், டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்ததாகவும் அதனால்தான் ரூபா இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

மற்றொன்று அரசியல் பிரச்னை. இதனால்தான் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்று கூறியுள்ளார். ஆக, சசிகலாவுக்குச் சலுகை கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலைத் தாண்டி கர்நாடக அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோலவே சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் முன்னரே சசிகலாவைத் தமிழகச் சிறைக்கு மாற்ற அதிமுக-வினர் தீர்மானித்திருந்தனர். ஆனால், தமிழக சிறையில் இருந்தால் எதிர்க்கட்சியினர் பிரச்னை கிளப்புவார்கள் என்பதால் சசிகலா மறுத்துவிட்டார். இதனால் நிர்வாகிகளும் இந்த விவகாரத்தை கைவிட்டுவிட்டனர்.

தற்போது சலுகை விவகாரம் கர்நாடக சிறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், விரைவில் சசிகலா வேறு மாநிலச் சிறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் தமிழகச் சிறைக்கு மாற்றப்பட வாய்ப்பில்லை. கர்நாடகம் மற்றும் தமிழகம் அல்லாத வேறொரு மாநிலச் சிறைக்கு சசிகலா மாற்றப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon