மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

ஆளுநருக்கு எதிர்ப்பு வேண்டாம்!

ஆளுநருக்கு எதிர்ப்பு வேண்டாம்!

‘ஆளுநர் செல்லும் இடத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது புதுவை பாரம்பர்யத்துக்கு ஏற்புடையது அல்ல’ என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதுவையின் உழவர்கரை தொகுதியில் ஆளுநர் தூய்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆனால், அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கிரண்பேடி அப்பகுதியில் இருந்து வெளியேறினார்.

அதேபோல், ஜூலை 15ஆம் தேதி கவர்னர் கிரண்பேடி ஊசுட்டேரியில் ஆய்வு செய்துவிட்டு வழுதாவூர் சாலையில் சைக்கிளில் ராஜ்நிவாஸ் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது காந்தி நகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட திரண்டு இருந்த காங்கிரஸார் கவர்னர் கிரண்பேடியைக் கண்டதும் அவருக்கு எதிராகக் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ஜூலை 16ஆம் தேதி நாராயணசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “புதுவை மாநிலத்தின் நிர்வாகியான ஆளுநர் கிரண்பேடி ஜூலை 15ஆம் தேதி ஊசுடு ஏரி பகுதிக்குச் சென்றபோது அவரை எதிர்த்து ஒரு சிலர் கோ‌ஷம் போட்டதாக தகவல் வெளியானது. புதுவையைப் பொறுத்தவரை மாநில மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர்கள். மாநில நிர்வாகி என்ற முறையில் ஆளுநருக்குப் புதுவையில் பல பகுதிகளுக்குச் செல்ல உரிமை உண்டு. அதேபோல் அமைச்சர்களும், நானும், எம்.எல்.ஏ-க்களும் புதுவையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகிறோம். நாள்தோறும் மக்களையும் சந்தித்து வருகிறோம். நிர்வாக ரீதியாக மாநில அரசின் உரிமைகளில் கைவைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அதே வேளையில் மாநில நிர்வாகி ஒரு பகுதிக்கு செல்லும்போது ஆட்சேபம் தெரிவிப்பது புதுவை பாரம்பர்யத்துக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, நான் பொதுமக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யாரும் ஆளுநர் செல்லும்போது அவருக்குத் தடை ஏற்படுத்த வேண்டாம். அது நம்முடைய நாகரிகத்துக்கு ஏற்புடையது அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon