மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சிறப்பு நேர்காணல்: குழந்தைகள் வாசிக்க வேண்டும்! - ஆயிஷா இரா. நடராசன்

சிறப்பு நேர்காணல்: குழந்தைகள் வாசிக்க வேண்டும்! - ஆயிஷா இரா. நடராசன்

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக, கல்வியாளராக, இந்த மாணவ சமூகத்துக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

இன்றைய குழந்தைகள் குறித்த அத்தனை விஷயங்களும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. இன்றைய நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் கையாளும் வேகம் வியக்க வைக்கின்றன. நம் குழந்தைகளிடம் ஒரு செல்போனை கொடுத்தால் அவர்கள் அதில் என்னென்னவெல்லாம் செய்கிறார்களோ அது எனக்குத் தெரியாது. அதைப் பயன்படுத்தும் வேகம் மிகவும் அற்புதமானது. தேடித்தேடி இன்றைய குழந்தைகள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பல மணி நேரங்களை சும்மா உட்கார்ந்து கழிக்கும் குழந்தைகள் இங்கு அதிகம். அம்மா, அப்பா பணியில் இருந்து திரும்ப மாட்டார்கள். அந்த நேரத்தில் கரேத்தே பள்ளிக்குச் செல்ல வேண்டும். இசை கற்க வேண்டும். கணிதம் கற்க வேண்டும். அம்மா, அப்பா இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புகிறார்கள் என்றால் அந்த நேரத்துக்குச் சரியாக வீடு திரும்ப வேண்டும். இப்படி தங்கள் பொன்னான நேரத்தைக் கழித்தாலும் இநக்ச் சிரமங்களையெல்லாம் பெற்றோர்களுக்காக பொறுத்துக் கொள்கின்ற மனப்பக்குவம் இருக்கிறதே… இதுதான் இன்றைய குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மிகப் பெரிய பொறுமை நம் குழந்தைகள் இடத்தில் இருக்கிறது. இதை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை.

ஆனால், உணவு பழக்கத்தை நம்முடைய குழந்தைகள் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டமிது. இதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும். நம் தமிழகத்தில் பரோட்டா கலாசாரம் தீவிரமாகப் பரவியிருக்கிறது. நான் மிகச் சாதாரண விஷயத்தைப் பற்றி பேசுவதாக உங்களுக்குத் தோன்றலாம். கேரளாவில் இந்தப் பரோட்டாவுக்கு எதிராக மிகப்பெரிய கல்வி இயக்கம் நடந்திருக்கிறது. சமீபத்தில், நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநிலக் குழந்தைகளுக்கான ஒரு கல்வி முகாம் நடந்தது. அதில் நான் ஒரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். அவர்கள் என்னை அழைத்தபோது, “ஒருநாள் இரவு உணவோடு என்னை அழையுங்கள். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டே என் உரையை நிகழ்த்துகிறேன்” என்று கூறியிருந்தேன்.

இரவு உணவுக்கு நான் சென்றபோது, அங்கே பஃபே முறையில் உணவு வழங்கப்பட்டது. நம் மாணவர்கள் அனைவரும் பரோட்டாவைத்தான் எடுத்து விருப்பத்தோடு உண்டார்கள். ஆனால் கேரளாவில் இருந்து வந்த ஒரு குழந்தைகூட ஒரு பரோட்டாவைக் கூடத் தொடவில்லை. அதைப் பார்த்து நான் மிகவும் வியந்தேன். இது எப்படிச் சாத்தியமானது? கேரளாவில் இருக்கக்கூடிய அறிவியல் இயக்கங்கள் இதை ஒரு பெரிய இயக்கமாக நடத்திக்காட்டினார்கள். ஒரு காலகட்டம் வரை கேரளா அடை என்று சொல்லக்கூடிய பரோட்டாவைச் சாப்பிடாமல் யாரும் இருப்பதில்லை. ஆனால், இன்று உணவு என்று உண்டால் கோதுமையில் செய்த உணவு இருக்கிறதா என்று கேரள மாணவன் கேட்கிறான். அவன் திட்டமிட்டு மைதாவைப் புறக்கணிக்கிறான். இந்த விழிப்பு உணர்வு நம் குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும். நம் குழந்தைகள் உணவு பழக்கத்தை மெல்ல மெல்லச் சுகாதார முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும். இதை நான் குழந்தைகளை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

இரண்டாவது, வாசிப்பு சம்பந்தமானது. ஒரு குழந்தையை வாசிக்க வைத்துவிட்டீர்கள் என்றால் அதன் வாழ்க்கை உண்மையில் மாறிப்போகும். பெற்றோர்கள், குழந்தைகளைத் தங்கள் கனவைச் சுமக்கும் பெட்டிகளாக நினைக்கிறார்கள். கோடை விடுமுறைக்கு ஒரு கேம்ப். காலாண்டு விடுமுறைக்கு ஒரு கேம்ப். இந்த கேம்ப் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவன் ஹிட்லர். அவன் புத்தகமே மெயின் கேம்ப். ஹிட்லர் இந்த கேம்ப்களில் வதை முகாம்களைத்தான் நடத்தினான். அதே வதை முகாம்தான், இன்று பயிற்சிகள் என்ற முறையில் குழந்தைகளை ஓர் அறையில் அடைத்து வைப்பது நாகரிகமாகி விட்டது. நாங்கள் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறோம்... நாங்கள் அதைக் கற்றுக்கொடுக்கிறோம் இதைக் கற்றுக்கொடுக்கிறோம் என்று எங்கு பார்த்தாலும் கேம்ப்... கேம்ப்... கேம்ப்… யோகா வகுப்புக்கு ஒரு கேம்ப்.

ஒரு குழந்தைக்கு தலைமைப் பண்பை உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். அவர்களைச் சுதந்திரமாக வாசிக்கவிடுங்கள்… அது போதும். வாசிப்பை விட யோகாவோ, இசையோ, இல்லை வேறு எதுவுமோ கிடையாது. எப்படி வாசிக்க வேண்டும் என்றால்… உங்கள் குழந்தைகளை ஒரு புத்தகக்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு நீங்கள் எந்த நூலையும் பரிந்துரைக்க வேண்டாம். அவர்கள் விருப்பப்படி விட்டுவிடுங்கள். அவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கட்டும். உங்கள் குழந்தை பெரிதாகச் செலவு செய்துவிடாது. அந்தக் குழந்தை அதற்குத் தேவையானதை சரியாகத் தேர்ந்தெடுக்கும். ஆனால், நம்மாள் என்ன செய்வான் என்றால், ஆயிரம் பக்கங்கள் கொண்ட ‘ஐஏஎஸ் ஆவது எப்படி?’ என்ற நூலை எடுத்து குழந்தையின் தலையில் சுமத்துவான். ஏனென்றால் இவனைப் பொறுத்தவரை அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்துவிட்டால் போதும் தன் குழந்தை ஐஏஎஸ் ஆகிவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

ஆனால், அந்தக் குழந்தை அதைத் தொடவே தொடாது. புத்தகம் வாங்கிக்கொடுத்த நாலாவது நாள் நம்ம ஆள் என்ன சொல்வான் தெரியாமா? “எவ்ளோ விலை கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தேன். உன் புள்ளைத் தொட்டானா அந்தப் புத்தகத்தை?” என்று மனைவி மீது பாய்வான்.

ஆனால், உங்கள் குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் புத்தகத்தை நீங்கள் வாங்க அனுமதித்தால் அதுவே தானாக உட்கார்ந்து படிக்கும். சுதந்திர வாசிப்பு அவசியம். கணினியின் முன்னாள் அமர்ந்து காலத்தை கழிப்பதைவிட உங்கள் குழந்தை புத்தங்களை வாசிக்கும் குழந்தைகளாக இருக்க வேண்டும். இல்லை அப்படியே கணினியை பயன்படுத்தும் குழந்தைகளாக உங்கள் குழந்தை இருக்கிறதா? தவறில்லை... இணைய உலகில் லட்சக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு உருவாக்கிக்கொடுக்க வேண்டும். நம் பள்ளிப்படிப்பில் நம் குழந்தைகளுக்கு வாசிப்புக்கு இடமில்லை. அன்றாட வாழ்வில் வாசிப்புக்கு இடமில்லை. வளர்ச்சிப் பாதையில் வாசிப்புக்கு எந்த இடத்திலுமே இடமில்லை. ஒரு பொது இடத்தில் ஒரு குழந்தையை சந்திக்கும் ஒரு மனிதர், அந்தக் குழந்தைக்கு கை கொடுத்து, “என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்பதில்லை. ஏனென்றால் அந்த மனிதரும் எதையும் வாசிப்பதில்லை. குழந்தையிடமும் கேட்பதில்லை. எப்போது குழந்தைகள் வாசிக்கத் தொடங்குகிறார்களோ அப்போதுதான் அவர்களின் சொர்க்கபுரியை அவர்கள் காண முடியும். அவர்களை அந்த இடத்தை நோக்கி நாம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆகவே, குழந்தைகளே நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்குங்கள். அங்கேதான் இருக்கின்றது உங்களுடைய உலகம்.

தாங்கள் குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதக் கூடிய எழுத்தாளர். தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

மிகச் சரியாக இந்த நேர்காணலை முடிக்கின்றீர்கள். நான் தற்போது “எங்கள் தேசம்” என்று என்ற நூலைக் குழந்தைகளுக்காக எழுதி முடித்திருக்கிறேன். இந்தியா என்பது அனைவருக்குமான ஒரு தேசம். அது ஒரு மதம் சம்பந்தப்பட்டவருக்கோ அல்லது ஒரே கலாசாரம் என்று சொல்லக்கூடிய காவி கலாசாரத்துக்கோ சொந்தமானது அல்ல என்று சொல்லக்கூடிய ஒரு புத்தக்கத்தை நான் தற்போது எழுதி முடித்திருக்கிறேன். ‘இந்தியா எனது தேசம்’ என்ற உறுதிமொழியை நீ பள்ளியில் ஏற்கும்போது அது எப்படிப்பட்ட தேசம் என்பதைப் புரிந்துகொள்ள குழந்தைக்கான புத்தகமாக அது இருக்கும். அடுத்து ‘கல்பனா சாவ்லா கிளப்’ என்றொரு அறிவியல் புனைகதையை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இது இரண்டையும் தவிர ‘இந்தியக் கல்வியாளர்கள்’ என்றொரு புத்தகத்தை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மூன்று புத்தகங்களும்தான் நான் தற்போது குழந்தைகளுக்காகப் படைத்துக்கொண்டிருப்பது. இதைத் தவிர அரசின் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள்… நமது தோழர்கள் நடத்தும் அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகள்... புத்தகக்காட்சிகளுக்கு விஜயம் செய்யும் பணிகள் என நான் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். ‘புத்தகம் பேசுகிறது’ இதழில் தொடர்ந்து நான் இருபது ஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று நேர்காணலை நிறைவு செய்தார் ஆயிஷா இரா.நடராசன். அவருக்கு நன்றி கூறி நான் புறப்பட்டபோது பள்ளியின் இறுதி மணி அடிக்கத் தொடங்கியது…

பின் குறிப்பு: இந்த நேர்காணலை நான் தொடங்கும் முன் இப்படியொரு மிக நீண்ட நேர்காணலாக இது இருக்க வேண்டும் என்பது நான் திட்டமிட்டதுதான். ஆனால், அதை நிறைவேற்றித் தந்தது இந்த உரையாடலில் முழு மனதோடு பங்கேற்ற ஆயிஷா இரா.நடராசன் அவர்கள்தான். அவர் ஒருநாள் முழுவதும் என்னோடு உரையாடியதால்தான் என்னுடைய எண்ணம் ஈடேறியது என்பது உறுதி. ஆகவே, இந்த நேரத்தில் ஆயிஷா நடராசனுக்கு நான் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். இந்த உரையாடலுக்கான ஆழத்தை உணர்ந்து அதன் போக்கில் அதை உரையாட அனுமதித்தது என் மின்னம்பலம் நிறுவனம். எத்தனைச் செய்தி நிறுவனங்கள் அதில் பணியாற்றும் படைப்பாளிகளை, செய்தியாளர்களை அவர்கள் போக்கில் பணியாற்ற அனுமதிக்கிறது என்பதை நான், என் பதினைந்து ஆண்டு கால அனுபவத்தில் நன்கு அறிவேன். ஆகவே மின்னம்பலத்துக்கும் என் நன்றியை நான் உளமாரப் பகிர்கிறேன்.

சந்திப்பு - வேட்டை பெருமாள்

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon