மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

டி.சி.பி. வங்கியின் நிகர லாபம் உயர்வு!

டி.சி.பி. வங்கியின் நிகர லாபம் உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டி.சி.பி. வங்கியின் நிகர லாபம் இந்த நிதியாண்டின் (2017-18) முதல் காலாண்டில் 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று அந்த வங்கி கூறியுள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 290 கிளைகள் மற்றும் 504 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. 1930ஆம் ஆண்டு இந்த வங்கி தொடங்கப்பட்டது.

இந்த நிதியாண்டில், ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைந்த முதல் காலாண்டில் டி.சி.பி. வங்கி ரூ.65 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த வங்கி ரூ.47 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

அதேபோல நிகர வட்டி வருவாயும் இந்த காலாண்டில் 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாயாக இந்த காலாண்டில் ரூ.233 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர வட்டி வருவாயாக ரூ.177 கோடி ஈட்டியிருந்தது.

மற்ற வருவாய்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் இந்த காலாண்டில் 43 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரூ.86 கோடி ரூபாய் மற்ற வருவாயாக டி.சி.பி. வங்கி ஈட்டியுள்ளது. இவ்வாறு கடந்த நிதியாண்டில் இந்த வங்கிக்குக் கிடைத்த வருவாய் ரூ.60 கோடியாகும்.

தனியார் துறை வங்கிகள் ஒவ்வோர் ஆண்டிலும், ஒவ்வொரு காலாண்டிலும் வளர்ச்சியைப் பதிவுசெய்துவரும் சூழலில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon