மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு: டெக் மஹிந்தரா

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு: டெக் மஹிந்தரா

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்தரா இந்த ஆண்டில் புதிதாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க உள்ளதாக கூறியுள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு விசா கொள்கைகளைக் கடுமையாக்கினார். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று ஐ.டி. ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அமெரிக்கப் பணிகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் அமெரிக்க அரசு வலியுறுத்தியது. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் புதிதாக 10,000 பணியிடங்கள் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தன. தற்போது மற்றொரு இந்திய நிறுவனமான டெக் மஹிந்தராவும் அமெரிக்கர்களுக்கு 2,200 பணியிடங்களை புதிதாக வழங்க இருப்பதாக கூறியுள்ளது.

தற்போது டெக் மஹிந்தராவுக்கு மிகப்பெரிய சந்தையாக இருப்பது அமெரிக்கா தான். இந்நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 28 நகரங்களில் இயங்கி வருகிறது. அதில் 16 மையங்களை மேம்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 1.17 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளால் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் இந்தியப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகிறது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon