மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மாஜி முதல்வர் மறைவு!

மாஜி முதல்வர் மறைவு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராகச் செயல்பட்ட 77 வயதாகும் நார் பகதூர் பண்டாரி நேற்று ஜூலை 16ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் இறந்தார்.

சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிமில் உள்ள மல்பாசே பகுதியைச் சேர்ந்தவர் நார் பகதூர் பண்டாரி. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அரசியலில் நுழைந்து, ஜனதா பரிஷத் கட்சியின் சார்பில் 1979ஆம் ஆண்டு போட்டியிட்டார்.

முதன்முறையாக சிக்கிம் மாநில சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையிலேயே முதல்வராகவும் இவர் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இரண்டாவது முதல்வராக இவர் பதவியேற்றார். அதன் பிறகு, ஜனதா பரிஷத் கட்சியில் இவருக்கும், இவரது எதிரணியினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து விலகி சிக்கிம் சங்க்ராம் பரிஷத் என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, 1984 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலின்போது, சிக்கிம் சங்க்ராம் பரிஷத் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மேலும், இரண்டு முறை முதல்வராக அவர் பணியாற்றினார். இவருக்கு தில் குல்மாரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மனைவி தில் குமாரி முன்னாள் எம்.பி. ஆவார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நார் பகதூர் பண்டாரி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று ஜூலை 16ஆம் தேதி இறந்தார். அதையடுத்து, சிக்கிம் அரசு சார்பில் இன்று ஜூலை 17ஆம் தேதி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது