மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இந்திய வீரர்!

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்ஸ் பட்டம் வென்றார். நேற்று (ஜூன் 18) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, 47-ம் நிலை வீரர் ஜப்பானின் கசுமசா சகாயை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய ஸ்ரீகாந்த் 2-வது செட்டில் சற்று தடுமாறினாலும் பிறகு 19-19 என்று சமன் செய்தார். இறுதியில் இரண்டு புள்ளிகளை தொடர்ச்சியாகப் பெற்று ஸ்ரீகாந்து சாம்பியன்ஸ் பட்டம் வென்றார்.

ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் சகாயை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் தட்டிச்சென்றார். அவருக்கு ரூ.48 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 35 ஆண்டு கால இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் இந்த கோப்பையை இந்திய வீரர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் இந்த பட்டத்தை மூன்று முறை (2009, 2010, 2012) வென்று இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான ஸ்ரீகாந்த் இந்த வெற்றி குறித்து பேசும்பொழுதுசகாய் 2-வது செட்டில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார். இதில் நான் 6-11 என்று பின்தங்கி இருந்து அதன் பிறகு 13-13 என்று சமன் செய்ததே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. சமீபத்தில் சிங்கப்பூர் ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்தேன். இப்போது இங்கு பட்டத்தை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு முன்பாக கிடைத்த இந்த வெற்றி, எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon