மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

வண்டலூர் புதிய பேருந்து நிலைய பணிகள் செப்டம்பரில் தொடங்கும்!

வண்டலூர் புதிய பேருந்து நிலைய பணிகள் செப்டம்பரில் தொடங்கும்!

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், தனியார் ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.சென்னையின் இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடுக்கு வராமல் தாம்பரத்துக்கு அப்பால் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, தென் மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த பணியை செய்து முடிக்கும் பொறுப்பு சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சி.எம்.டி.ஏ. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்காக 88 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. முதல் கட்டப் பணிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தி இந்து நாளிதழிடம் கூறியதாவது: அண்மையில், சி.எம்.டி.ஏ. கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட அறிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, பேருந்து நிலையம் வரும் பகுதியில் பிற துறைகளின் கட்டுமானங்கள் ஏதேனும் வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம். மேலும், பேருந்து நிலையத்துக்கான இணைப்புச் சாலைகள் வசதி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இதில், புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்துக்கு அருகே தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பகுதி உள்ளது. இந்திய தொல்லியல் துறை விதிகளின்படி இந்த இடத்தில் கட்டுமானங்கள் செய்யக் கூடாது. அதுமட்டுமில்லாமல், இணைப்புச் சாலை அமைக்க வேண்டிய பகுதிகளில் தனியார் நிலங்கள் இருக்கின்றன. இதனால் பேருந்து நிலையம் அமைப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல்களைத் தீர்க்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முயற்சி செய்துவருகிறோம்.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon