மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 18 ஜுன் 2017

தேயிலை: உற்பத்தி சரிவு - விலை உயர்வு!

தேயிலை: உற்பத்தி சரிவு - விலை உயர்வு!

தேயிலை பயிரிடும் பகுதிகளில் கடந்த ஆண்டு நிலவிய வறட்சியால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்திப் பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தேயிலை விலை அதிகரித்துள்ளது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் (ஜனவரி - மார்ச்) தேயிலை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.116.03 ஆக இருந்தது. இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டில் தேயிலை விலை இந்த அளவுக்கு இருந்தது. பின்னர் 2014ஆம் ஆண்டில் தேயிலை விலை சரிந்து கிலோ ஒன்றுக்கு ரூ.93.06 வரை சென்றது.

இதுகுறித்து தேயிலைக் கொள்முதல் குழுவைச் சேர்ந்த மோண்டல் கூறும்போது, “இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வட இந்தியாவில் தேயிலை உற்பத்தி 19.3 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல தென்னிந்தியாவில் 12 சதவிகிதம் உற்பத்தி சரிந்துள்ளது. வட இந்தியாவில் சி.டி.சி. ரக தேயிலையின் மொத்த விலை ரூ.10 முதல் 15 வரை அதிகரித்துள்ளது. அதேபோல ஆர்த்தடாக்ஸ் ரகம் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த மே மாதத்தில் தேயிலையின் தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.115.07 ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.104.9 ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டிலும் மழை குறைந்து வறட்சியே காணப்பட்டது. எனவே, அப்போதிருந்தே தேயிலை உற்பத்தி குறைவாகவே இருந்தது. இதனால் விலை அதிகரித்துள்ளது” என்றார்.

மேலும், இதனால் தேயிலை விலை சந்தைகளில் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தரம் குறைந்த தேயிலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மோண்டல் கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon