மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

படியாய் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

 படியாய் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

மன்னர்களுக்கெல்லாம் மன்னன், மாமன்னன் - அந்தக் கண்ணன்தான் என்பதை தன் பாசுரங்கள் மூலமாக மட்டுமல்ல; வாழ்வின் மூலமும் எடுத்துக்காட்டியவர்தான் குலசேகர ஆழ்வார். பகட்டான, சொகுசான தன் மன்னர் குல வாழ்வை, மாலடிமை செய்வதற்காகவே துறந்தவர் குலசேகர ஆழ்வார்.

கொங்கு நாட்டில் சந்திரகுல மன்னரான திருடவிரதருக்கு இளவரசனாக அவதரித்தவர் குலசேகரர். குல வழக்கப்படி, தந்தைக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். நான்கு படைகள், பணிவிடை செய்ய பல நூறுபேர், அந்தப்புரத்தில் காத்திருக்கும் அழகுப் பதுமைகள் என்று இந்த புறவுலகம் புதுக்கி வைத்திருக்கும் இன்பங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, எப்போதும் எம்பெருமான் நாராயணனின் திருநாமங்களையே உச்சரித்து வந்தார்.

திருமாலைப் போற்றும் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்து வந்த குலசேகரர், திருமால் அடியார்கள் பலரையும் அரண்மனைக்கு அழைத்து, அவர்களையும் இந்த இறை இன்பத்தில் ஆழ்த்தினார். மாலடியார்களை அழைத்து அவர்களை புராணங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்பார்.

இப்படித்தான், ராமாயணத்தை வாசிக்கச் சொல்லி அடியார்களுடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் குலசேகரர்.

‘சீதை, லட்சுமணன் ஆகியோரோடு வனவாசம் ஏகிய ராமன், அங்கே முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார். அரக்கர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். ஆனபோதும் சீதைக்கு காவலாக இலட்சுமணனை நிறுத்திவிட்டு தன்னந்தனியாக ராமன் புறப்பட்டான்’ என்று, அடியார் வாசித்துக் கொண்டிருக்க, கேட்டுக்கொண்டிருந்த குலசேகரர் அதிர்ந்துவிட்டார்.

‘என்னப்பா சொல்கிறாய்? அரக்கர்களை எதிர்க்க என்னப்பன் ராமன் தன்னந்தனியாகச் செல்கிறாரா? அரக்கர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக வேறு சொல்கிறாய்? ராமனை எப்படி தன்னந்தனியாக அனுப்புவது?’ என்று சத்தமாகக் கேட்டவர், திடீரென தன் மந்திரி பிரதானிகளை அழைத்தார்.

‘ராமர் அரக்கர்களுடன் போரிட தன்னந்தனியாகச் செல்கிறார். அவரோடு நாமும் செல்ல வேண்டும். பாசறைக்குச் சென்று நம் நாற்படை வீரர்களையும் போருக்குத் தயார் செய்யுங்கள். இது என் உத்தரவு’ என்று கர்ஜித்தார் குலசேகரர். படைகளும் திரண்டன.

திருமால் அடியார்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மந்திரிகளோ, மாலடியார்களைப் பார்த்து முறைத்தனர். ‘எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் காரணம். மன்னரைக் கெடுத்து வைத்திருக்கிறார்கள்’ என்று கடிந்துகொண்டனர்.

ஆனால் குலசேகரரோ, தனது மந்திரி பிரதானிகளிடம் ‘என்ன? இன்னும் படைகள் தயாராகவில்லையா?’ என்று மீண்டும் மிரட்ட... சற்றுநேரம் யோசித்து மன்னனிடம் தூதர் என்று சொல்லி ஒருவரை அழைத்துச் சென்றனர். அவர் மன்னரிடம், ‘மன்னா.... ராமபிரான் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பிவிட்டார். எனவே, தங்கள் படைகளை இப்போது அனுப்ப வேண்டாம்’ என்று சொல்லவும்தான் பதற்றம் குறைந்து இயல்பானார் மன்னர். படைகளுடன் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பினார். இந்தளவுக்கு அவர் திருமால் மீது பக்திப் பித்து வைத்திருந்தார் என்பதற்கு இதுவே சான்று.

மன்னர் திருமால் அடியார்களுடனேயே சதாசர்வ காலமும் இருப்பதை உணர்ந்த மந்திரிகள், அரண்மனையைவிட்டு மாலடியார்களை விரட்ட ஒரு திட்டம் தீட்டினர்.

அது என்னவென்றால்...

மன்னர் தினமும் வழிபாடு நடத்திட அரண்மனை வளாகத்திலே திருமால் விக்ரகம் பிரதிஷ்டை செய்திருந்தார். அந்த விக்ரகத்துக்கு திரு ஆபரணங்கள் நிறைய சூட்டியிருந்தார். தங்கக் கவசம், வெள்ளிக் கவசம், நவரத்தின மாலைகள் என்று மாலுக்கு ஆபரணங்களைச் சூட்டி அழகுபார்த்து வந்தார் மன்னர். அந்த வகைவகையான நகைகளை வைத்தே மாலடியார்களை அரண்மனையிலிருந்து விரட்டிட திட்டமிட்டனர்

பெருமாளின் திரு ஆபரணங்களில் முக்கியமானதும், மிக மதிப்புகொண்டதுமான நவரத்ன மாலையை மந்திரிகளே இரவில் எடுத்து அதை ஒளித்துவைத்துவிட்டனர். மறுநாள் காலை, அரண்மனையே பரபரப்பானது. பெருமாளின் திருமார்பில் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த நவரத்ன மாலை காணாததைக் கண்டு மாலடியார்கள் திடுக்கிட்டனர். இதை எதிர்பார்த்திருந்த மந்திரிகள், ‘அரண்மனையிலேயே திருட்டா? அதுவும் மன்னர் வணங்கும் பெருமாளின் நவரத்ன மாலையையே களவாடிவிட்டார்களா? அரண்மனைக்குள் புகுந்து திருடுமளவுக்கு யாருக்கும் துணிவில்லை. இங்கேயே இருக்கும் மாலடியார்கள் யாரோதான் திருடியிருக்கிறார்கள்’ என்று மந்திரிகள் சொல்ல, மாலடியார்கள் வேதனையில் வெம்பினர்.

மன்னருக்குத் தெரியாமலேயே ஒரு குடத்துக்குள் பாம்பை போட்டுவைத்து ‘அனைத்து மாலடியார்களும் குடத்துக்குள் கையை விட வேண்டும். தவறு செய்யவில்லை எனில் பாம்பு கடிக்காது. திருடியவரை பாம்பு கடிக்கட்டும்’ என்று உத்தரவிட்டனர் மந்திரி பிரதானிகள். எப்படியாவது மாலடியார்களை அரண்மனையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட மன்னர் வேகமாக சபைக்கு வந்தார். ‘திருமால் அடியார்களைச் சோதிக்க நினைப்பது பாவம். நானே கையை குடத்துக்குள் விடுகிறேன்’ என்று சொல்லி கையை விட்டார். இதற்கு மேலும் பொறுக்கமுடியாத மந்திரி பிரதானிகள், மன்னரிடம் மன்னிப்புக் கேட்டு தாங்கள் போட்ட திட்டத்தையும் ஒளித்துவைத்திருந்த நவரத்ன மாலையையும் வெளிப்படுத்தினர்.

இதைக்கேட்டு அதிர்ந்த மன்னர், ‘இனியும் இந்த சபையில் மன்னராக வீற்றிருக்க விரும்பவில்லை’ என்று தனது முடி துறந்து, தன் மகனுக்கு முடிசூட்டிவைத்து, மாலடியார்களோடு திருவரங்கம் புறப்பட்டார்.

பெருமாளின் இன்ப துன்பங்களை தனது இன்ப துன்பமாக உணர்ந்ததால், இவர் பெருமாள் என்றும் அழைக்கப்பட்டார். குலசேகர ஆழ்வாரின் பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன.

குலசேகர ஆழ்வாரின் ஒரு பாசுரம் பக்தியின் உச்சகட்ட சுவையை நமக்கு உணர்த்துகிறது.

‘செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே

நெடியானே வேங்கடவா! நின்

கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும்

கிடந்தியங்கும்

படியாய்க்கிடந்துன்

பவளவாய் காண்பேனே’’

இந்தப் பாசுரத்துக்கு நமது நயவுரை நம்பி டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களின் உரை காண்போம்.

‘செடிபோல அடர்ந்த தீவினைகளை தீர்க்கும் திருமாலே! பெரியோனே! திருவேங்கடவனே! உன் கோயிலின் வாயிலிலே தொண்டர்களும் தேவர்களும் அணங்குகளும் ஏறி இறங்கும்படியாக இருந்து, உன் பவளத் திருவிதழ்களைக் காணமாட்டேனா?’ என்கிறார் நயவுரை நம்பி.

குலசேகராழ்வாரின் வேண்டுகோளை திருவேங்கடவன் ஏற்றுக்கொண்டதன் அடையாளம்தான் இன்றும் திருப்பதி கோயிலின் வாசற்படிக்கு குலசேகரன் படி என்று பெயர். திருவரங்கத்தில் கர்ப்பகிரகத்தின் முன்னிருக்கும் படிக்கும் குலசேகரன் படி என்று பெயர்.

படியாய் கிடப்பது என்னே பக்தி...

இன்னும் பக்திப் படியேறி தொண்டரடிப்பொடி ஆழ்வாரைத் தொடலாம் வாரீர்...

விளம்பர பகுதி

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon