மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

டிஜிட்டல் திண்ணை:முதல்வரும் நானே... பொதுச்செயலாளரும் நானே! பன்னீரின் புதிய டிமாண்ட்!

டிஜிட்டல் திண்ணை:முதல்வரும் நானே... பொதுச்செயலாளரும் நானே!  பன்னீரின் புதிய டிமாண்ட்!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது முதல் மெசேஜ்.

“பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைவதில் சிக்கல் நீடித்தபடியே இருக்கிறது. பன்னீர் தரப்பில் பேசுவதற்காக குழு அமைத்தாலுமே அவர்கள் சில கோரிக்கைகளை தெளிவாகச் சொல்லிவிட்டார்களாம். இது தொடர்பாக, நேற்று இரவு அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலிருந்து சிலர் பன்னீர் அணியில் உள்ள ஒருவரிடம் பேசியிருக்கிறார்கள். ‘சும்மா எதுக்கு இழுத்துட்டே இருக்கணும். அம்மா சமாதிக்கு வாங்க... ரெண்டு தரப்புலயும் கை கொடுத்து இணைஞ்சிடலாம். அதுக்குப் பிறகு என்ன வேணுமோ பேசிக்கலாம். நாம தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிஷமும் தினகரன் தரப்புல இருந்து எதுவும் சிக்கல் கொடுப்பாங்களோ என்று யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பன்னீர் தரப்பில் பேசியவர்கள், ‘கட்சியை இணைக்கிறத எப்பிடிங்க அவ்வளவு சாதாரணமா செஞ்சிட முடியும். எங்களோட கோரிக்கைகளை ஏற்கெனவே சொல்லிட்டோம். அதைப்பற்றி நீங்க எதுவும் சொல்லவே இல்லை. ஒரு விஷயத்துல அண்ணன் தெளிவா இருக்காரு. முதல்வர் பதவி பன்னீர் அண்ணனுக்கு கொடுத்துடணும். அதேபோல கட்சியோட பொதுச்செயலாளர் பொறுப்பும் அண்ணனுக்குத்தான் கொடுக்கணும். இது ரெண்டுக்கும் ஓ.கே.ன்னு நீங்க சொன்னா உடனே கட்சியை இணைக்க நாங்க ரெடியா இருக்கோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட ஜெயக்குமார் தரப்போ, ‘அது எப்படிங்க இரண்டையும் உங்களுக்கே விட்டுக்கொடுக்க முடியும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கட்டும். பொதுச்செயலாளர் யார் என்பதை அப்புறம் பேசிக்கலாம். உங்களுக்கு துணை முதல்வர் கொடுக்க ஏற்பாடு செய்யுறோம்’ என்று சொல்லியிருக்கிறது.

ஆனால் பன்னீர் தரப்பில் பேசியவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘அண்ணனைத்தான் அம்மாவே முதல்வராக நியமிச்சாங்க. அவரைத் தவிர இன்னொருத்தரை முதல்வராக எங்களால் யோசிக்க முடியாது. அதேபோல, கட்சியோட பொதுச்செயலாளர் பொறுப்பு நீங்க எங்களுக்குத்தான் கொடுக்கணும். இப்போ, நீங்க தினகரனை ஒதுக்கிட்டோம்னு சொல்லுவீங்க. நாளைக்கு நாங்க எல்லாம் வந்தபிறகு அவரை நீங்க கட்சியில சேர்த்துக்குவீங்க. அந்த அதிகாரம் பொதுச்செயலாளருக்கு இருக்கும். அதனால, அதுக்கு நாங்க சம்மதிக்கமாட்டோம். கட்சியில யாரைச் சேர்க்கணும், யாரை நீக்கணும்ங்கிற அதிகாரம் பன்னீர் அண்ணன் கையில்தான் இருக்கணும். இனி, எந்தக் காரணத்துக்காகவும் தினகரனோ, சசிகலா குடும்பமோ கட்சிக்குள் வரவே கூடாது. அதுக்கு அதிகாரம் எங்க கையில் இருக்கணும்’ என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி தரப்பிலிருந்துதான் பன்னீரைத் தேடி வரவேண்டும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

சற்று நேரத்துக்குப் பிறகு வந்தது இன்னொரு மெசேஜ்.

“இந்த விஷயம் எல்லாமே பன்னீர் கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘அவங்க நம்மை வெச்சு டிராமா பண்ணிட்டு இருக்காங்க. ஒன்னரைக் கோடி தொண்டர்கள் நம்ம பக்கம்தான் இருக்காங்க. 124 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் அவங்க பக்கம் இருக்காங்க. நாம கட்சியை கைப்பற்றிடுவோம் என்ற பயம் வந்ததால்தான் எடப்பாடி டீம் நம்மகிட்ட பேச்சுவார்த்தைக்கே வந்தாங்க. தினகரனை ஒதுக்கிவைக்கிறதா அறிவிச்சாங்க. அதனால, நாம அவங்களுக்கு பயப்படவேண்டிய அவசியம் இல்ல. இப்போ தேவை அவங்களுக்குத்தான் இருக்கு. அவங்க இறங்கி வரட்டும். நாம சொன்ன டிமாண்டுல இருந்து நாம எதுக்காகவும் மாற வேண்டாம்’ என்று, பன்னீரும் உறுதியாகச் சொல்லிவிட்டாராம்” என்பதுதான் அந்த மெசேஜ்.

எல்லாவற்றையும் காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “சசிகலாவை பார்ப்பதற்கு இன்று பெங்களூரு போவதாக திட்டமிட்டிருந்தார் தினகரன். ஏற்கெனவே, அவர் சென்றபோது சசிகலா பார்க்கவில்லை. அதனால் இந்த முறை அங்கிருக்கும் விவேக்கிடம் தான் வரும் தகவலைச் சொல்லியிருந்தார் தினகரன். ‘நான் கேட்டுட்டு சொல்றேன். அதன்பிறகு வாங்க...’ என்று விவேக் சொல்லியிருந்தாராம். சொன்னதுபோலவே நேற்று இரவு விவேக்கிடம் பேசியிருக்கிறார் தினகரன். ‘இப்போ வேண்டாம். அவங்களே சொல்றாங்களாம். அதுக்குப் பிறகு வந்தால் போதும்னு சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எதுவும் பேச வேண்டாம். அமைதியாக இருக்கச் சொன்னாங்க...’ என்று சொல்லியிருக்கிறார் விவேக். இதனால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் தினகரன்” என்ற, டைப்பிங் செய்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது.

வெள்ளி, 21 ஏப் 2017

அடுத்ததுchevronRight icon