மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மூன்று நாள் அவகாசம் : தினகரனுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு!

மூன்று நாள் அவகாசம் : தினகரனுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு!

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டதை ரத்து செய்த டெல்லி போலீசார், நாளை ஏப்ரல் 22ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக 2 அணிகளாக பிளவுபட்டபோது, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னம் கேட்டு விண்ணப்பித்ததால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றுவதுக்காக அதிமுக-வின் இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ரூ. 1 கோடியே 30 லட்சம் பணத்துடன் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர வேண்டும் என்றுகூறி டி.டி.வி.தினகரன் தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, சுகேஷ் சந்திராவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இரவு டெல்லி போலீசார் சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் சம்மன் வழங்கினார்கள். அதில், நாளை ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

டெல்லி போலீசார் சம்மன் கொடுத்தபோது, விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராக தயாராக இருப்பதாக போலீசாரிடம் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். அதன்பின்னர், இதுகுறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த அவர் போலீசில் ஆஜராக 3 நாள் அவகாசம் கேட்டது தொடர்பாக மின்னம்பலம்.காமில் இன்று ஏப்ரல் 21ஆம் தேதி காலை 7 மணி பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனுக்கு அவகாசம் கொடுக்க மறுத்து, நாளை ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி போலீசில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon