மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: சத்யராஜ் மன்னிப்பு கேட்கவில்லை!

சிறப்புக் கட்டுரை: சத்யராஜ் மன்னிப்பு கேட்கவில்லை!

சத்யராஜ் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பது மட்டும்தான் இன்றைய பிரேக்கிங் நியூஸ். மற்றபடி, “இனி என்னை வைத்துப் படம் எடுக்க வேண்டாம். தமிழக மக்களின் நலன்சார்ந்த அனைத்து நியாயமான பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன்” என்றெல்லாம் அவர் பேசியதை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

தமிழ்மொழி ஏன் இத்தனை சுவையானதாகவும், அறிவார்ந்ததாகவும் இருக்கிறதென்பதை பயன்படுத்தும்விதத்தில் பயன்படுத்தும்போதுதான் தெரியும். அந்த விதத்தில் சத்யராஜ் எழுதியிருக்கும் அல்லது வாசித்திருக்கும் இந்தக் கடிதத்தில் தமிழ் மொழியின் சுவையை அறியலாம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களைத் தாக்கியதற்காக வார்த்தைகளால் தாக்கினார் சத்யராஜ். தமிழர்கள் மரம்போல் இருந்தால், நாய்கள் சிறுநீர் கழித்துக்கொண்டுதான் இருக்கும் என்று சத்யராஜ் தமிழர்களை மரத்துக்கும், கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கியவர்களை (கவனத்தில் கொள்ளவும் ‘தமிழர்களைத் தாக்கியவர்களை’) நாய் என்றும் உவமை செய்திருந்தார். இதனால், இப்போது பாகுபலி 2 படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடையின் பொருட்டு, சத்யராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தனது அறிக்கையில், 9 வருடத்துக்கு முன்பு கன்னட மக்களை புண்படுத்தும்வகையில் பேசியதற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறாரே தவிர, மன்னிப்புக் கேட்கிறேன் என்று எங்கும் குறிப்பிடவில்லை. வருத்தம் - மன்னிப்பு அப்படியென்ன பெரிய வித்தியாசம்? ஒரு துக்க வீட்டில் உங்களது துக்கத்துக்கு வருத்தப்படுகிறேன் என்றுதான் சொல்வார்களே தவிர, மன்னித்துவிடுங்கள் என்று சொல்லமாட்டார்கள் அல்லவா? அப்படிச் சொன்னால் இவன்தான் இழப்புக்குக் காரணம் எனக்கூறி தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள். அதேமாதிரிதான் நான் குற்றவாளி அல்ல. மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமுமல்ல என்றவகையில், தனது 9 வருடங்களுக்கு முந்தைய செயலுக்கு வருத்தப்பட்டிருக்கிறார் சத்யராஜ்.

பாகுபலி திரைப்படத்திலேயே மகிஷ்மதி என்ற பெயரை மகிழ்மதி என தமிழ்ப்படுத்தியிருப்பார்கள். மகிஷ்மதி என்பது மகிஷாசுரனின் ஊர் என்பது திண்ணம். அதைத்தான் மைசூர் என அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 4ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் எருமை ஊர் என்று மைசூரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் தமிழை தமிழாக மாற்ற ராஜமௌலிக்கு ஒரு மதன் கார்க்கி கிடைத்ததுபோல, வட்டாள் நாகராஜுக்கு ஒரு கார்க்கியும் கிடைக்கவில்லை. சத்யராஜ் பேசிய தமிழ் அவருக்குப் புரிய அல்லது வட்டாள் நாகராஜ் தமிழைக் கற்றுக்கொள்ள 9 வருடங்கள் ஆகியிருக்கலாம்.

தமிழீழ மக்களின் பிரச்னையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, விவசாயிகளுக்கான பிரச்னையாக இருந்தாலும் சரி, தமிழக மக்களின் நலன்சார்ந்த அனைத்து நியாயமான பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன் என தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறேன். இப்படி நான் கூறுவதால், எதிர்காலத்தில் சத்யராஜை வைத்து படம் எடுத்தால் தொல்லை என நினைக்கும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டமடைய வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாரே தவிர, என்னை மன்னித்துவிடுங்கள். இனி, என் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள், நடிகர் சங்கம் முடிவெடுத்ததுபோல எந்த பொதுப்பிரச்னையிலும் நான் தலையிடாமல் இருப்பேன் என்றெல்லாம் அவர் எங்கும் கூறவில்லை.

தமிழின் மூலமாக தமிழன் என்ற அடையாளத்துக்காகவும் இந்தி திரையுலகின் மிகப்பெரும் நடிகரான ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் உருவானபோது உள்ளே அழைக்கப்பட்டவர் சத்யராஜ். யாரோ ஒரு இந்தி நடிகரை நடிக்கவைத்து, தமிழில் டப்பிங் பேசவைத்திருக்கலாம். ஆனால் சத்யராஜின் நடிப்பைக் கொண்டுவரமுடியாதல்லவா? பெரும்பாலும் ஒல்லியான தோற்றம்கொண்ட இந்தி நடிகர்கள், சத்யராஜைப்போல மீசையை முறுக்கி கம்பீரமாக இடுப்பில் கையை வைத்து நிற்கும் காட்சியை ஷூட்டிங் எடுக்கவே பல நாட்கள் கால்ஷீட் போய்விடும். இப்படி தனது திறமையாலும், தமிழ் சினிமாவின் இந்திய அடையாளமாகவும் விளங்குவதால்தான் பாகுபலி என்ற இந்தியாவின் பெருமை பேசும் ஒரு படைப்பை உருவாக்கியபோது சத்யராஜை கொண்டுவந்தார்கள். (நாசரும் அதே வரிசையில் சத்யராஜுக்கு மேலே நிற்பார்)

தமிழ் சினிமாவிலிருந்து நாசர் - சத்யராஜ் - ரம்யா கிருஷ்ணன், தெலுங்கிலிருந்து பிரபாஸ் - ராணா-அனுஷ்கா, மலையாளத்திலிருந்து ரோகிணி, கர்நாடகாவிலிருந்து சுதீப் என திராவிட நாட்டின் கலைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் பாகுபலி. (தமன்னா மட்டும்தான் பாலிவுட்டைச் சேர்ந்தவர்) இப்படி ஒரு திரைப்படம் இன்று இந்தியத் திரைப்படமாக உயர்ந்திருக்கிறது. ரிலீஸுக்கு முந்தைய பிசினஸ் மட்டும் ரூ.500 கோடியைத் தொட்டுவிட்டது. சத்யராஜின் கேரக்டரான கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற ஒரு கேள்வியை அடிப்படையாக வைத்ததுதான் மேற்கண்ட ரூ.500 கோடி பிசினஸ். சென்னையில் நடைபெற்ற பாகுபலி 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் பாகுபலி 2 படத்தைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று ரசிகர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த பெரும்பான்மையானோரின் பதில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக என்றே வந்தது. ஒரு படத்துக்கு, தனது கேரக்டரை இத்தனை பலமானதாக வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றிக்கடன் செலுத்தும் விதமாகத்தான் சத்யராஜின் இந்த வருத்தம்தெரிவிக்கும் படலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவரது அறிக்கையின்மூலமே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

எதிர்காலத்தில் சத்யராஜை வைத்துப் படம் எடுத்தால் தொல்லை என நினைக்கும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் எனக் கூறியிருப்பது, இந்தப் பிரச்னையின் மூலமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவருக்கு கிடைத்திருக்கும் அழுத்தம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பது தெரிகிறது. ஏனென்றால், காவிரி பிரச்னையின்போது ரஜினியின் நிலைப்பாடு குறித்து இதே சத்யராஜ் விமர்சித்துப் பேசியிருந்தார். காவிரிப் பிரச்னை தொடர்பாக சத்யராஜ், வட்டாள் நாகராஜ் உட்பட கர்நாடகாவில் தமிழர்களை அடித்த சிலரை கண்டித்துப் பேசிய கூட்டத்திலேயே, பெரிய நட்சத்திரங்களாக இருந்தும் தமிழர்களுக்கு எதுவும் செய்ததில்லை என கடுமையாக விமர்சித்த சத்யராஜ், இன்று மன்னிப்புக் கேட்டுவிட்டால் முரண்பாடு ஏற்படும் என்பதை அறிந்துதான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனாலும், அவரது நிலையிலிருந்து ஒருபடி இறங்கியிருப்பதை மனதில் குறித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

9 வருடங்களாக 30 படங்களுக்கும் மேலாக கர்நாடகாவில் நடித்துவிட்ட சத்யராஜை, திடீரென இந்தப் பிரச்னையில் சம்பந்தப்படுத்தியிருப்பதால், விஷயம் தெரியாமல் மாட்டிக்கொண்ட ராஜமௌலி மற்றும் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றவே இந்த வருத்தம் தெரிவிக்கும் படலம் நடைபெறுகிறது என்பதையும் அவரை ஆதரிக்கும் உலகத் தமிழர்களுக்கு பாகுபலி என்ற பெரிய படத்தின் ஒரு சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு; சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல், கர்நாடக மாநில பாகுபலி 2 வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற கூடுதல் பொறுப்பும் எனக்குண்டு என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எல்லாவற்றையும் கடந்து இப்போது ஏன் இந்தப் பிரச்னை கர்நாடகாவில் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விதான், ‘கட்டப்பாவை ஏன் பாகுபலி கொன்றார்?’ என்பதைவிட மர்மமான கேள்வியாக இருக்கிறது. காரணம், மிக எளிதானது. இந்தியாவில் பொய்த்துப்போன மழையால் அனைத்து நதிநீர் தேக்கங்களும் வழக்கத்தைவிட குறைந்த அளவிலான நீரையே பெற்றுள்ளன. காவிரி பிரச்னையைப் பொருத்தவரை, இப்போது ஓங்கி நிற்பது தமிழகத்தின் கைதான். காவிரி நடுவர் மன்றம், தண்ணீர் திறந்துவிடும் அளவு என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு சாதகமாகவே நீதிமன்றங்களின் தீர்ப்பு இருந்துவருவதால், அடுத்து வரவிருக்கும் வறட்சிக் காலத்தில் தமிழகம் தண்ணீர் கேட்டால் ஒருமித்த கருத்துடன் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு பயிற்சி அணிவகுப்பாகவே இந்த ‘பாகுபலி 2 தடை’ என்ற டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. சத்யராஜ் நேரில் வந்து தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனை என்றும் நடக்காது என்பது வட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கே தெரியும். கர்நாடகாவின் அரசியல் ஆட்டத்தில் ஒரு பகடையாகவே இத்தனை ஆண்டுகளைப்போல் இப்போதும் அவர் உருட்டப்பட்டிருக்கிறார்.

ஆனால் நாங்களும் பகடையை உருட்டுகிறோம் என தமிழனை மன்னிப்புக் கேட்க வைத்த பாகுபலி 2 திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்யச்சொல்லி #BanbahubaliinTN என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு ஒரு வட்டாள் நாகராஜ் போதும். அவர் நல்லவேளையாக கர்நாடகாவில் இருக்கிறார். தமிழகத்திலும் சில வட்டாள் நாகராஜ் உருவாவது இன்றைய தமிழகச் சூழலுக்கு நல்லதல்ல. திடமான அரசியல் தலைமை தமிழகத்தில் இருந்தால் நேரில் வந்து மன்னிப்புக் கேட்க சொல்லாமல், 2008இல் செய்ததுபோல சத்யராஜின் உருவபொம்மையை மட்டும் கொளுத்திவிட்டு அமைதியாக இருந்திருப்பார்கள். இங்கு வென்றிருப்பது வட்டாள் நாகராஜ் போன்றவர்களின் சதி அல்ல, சத்யராஜ் என்ற கலைஞனின் ஆகிருதியும் - அசாத்திய திறமையும் - தமிழும்தான். எப்படி இருந்தாலும், சத்யராஜ் ஒரு கலைஞனாக வெற்றிபெற்றாலும், கமெர்ஷியல் அரசியலில் பலிகடாவாக்கப்பட்டு, அவரது நிலையிலிருந்து ஒரு படி இறங்கிவிட்டார்.

-சிவா

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon