மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தடை தளர்வு ரத்து!

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தடை தளர்வு ரத்து!

ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், விவசாயமும் விளைநிலங்களும் அழிந்துவருகின்றன. இதனால், வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சட்ட விரோதமான வீட்டு மனை விற்பனையை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அதில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்து அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, “20.10.2016க்கும் முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் அக்டோபர் 20க்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது” இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய நீதிபதி எஸ்.கே.கவுல் தமிழக அரசு இது தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யும் வரை தடையை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி டெல்லி சென்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ரமேஷ் நியமிக்கப்பட்டார்.

பின்னர், அங்கீகாரமற்ற வீட்டு மனை விற்பனை பத்திரப் பதிவுத் தடை தொடர்பான வழக்கு, கடந்த மார்ச் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த தடை உத்தரவால் ஏழை வீட்டு மனை முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையில் சிறு மாற்றம் செய்து, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. அதற்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகள் பத்திரப் பதிவு செய்ய முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக, தமிழக அரசு புதிதாக வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்தே நீதிமன்றம் முடிவு செய்யும். தமிழக அரசு இதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி அதற்கான கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றார். இந்நிலையில், அங்கீகாரமில்லாத வீட்டு மனை விற்பனைக்கான தடையை தளர்த்தியது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாக, அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய வரைவு விதிகள் உருவாக்கி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று வாதிட்டார். மேலும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் தொடர்பான புதிய வரைவு விதிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு ஏப்ரல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் தொடர்பாக புதிய வரைவு விதிமுறைகள் அறிவிப்பானை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தளர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரப் பதிவு இடைக்கால தடை தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டனர். ஆனாலும் நீதிபதிகள், தமிழக அரசு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் தொடர்பாக வரையறை செய்து புதிய வரைவு விதிமுறைகள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் புதிய வரைவு விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் வரை அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 4 மற்றும் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பத்திரப் பதிவுத் துறை மீண்டும் முடக்கமாகியுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon