மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இந்திய உச்சநீதிமன்றம் இங்கிலாந்துக்கு எப்படி உத்தரவிட முடியும்?

இந்திய உச்சநீதிமன்றம் இங்கிலாந்துக்கு எப்படி உத்தரவிட முடியும்?

உலகப் புகழ்பெற்ற விலை மதிக்கமுடியாத கோஹினூர் வைரம் தற்போது இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ‘டவர் ஆஃப் லண்டன்’ என்றறியப்படும் கோட்டை அரண்மனையில் உள்ளது. 105 காரட் கோஹினூர் வைரக்கல் முதலில் ஆந்திராவில் உள்ள குண்டூரை பிறப்பிடமாகக் கொண்டது. கோஹினூர் வைரம் வரலாற்றில் முகலாயர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள் என்று பல அரசர்களின் கைகளுக்கு மாறி இறுதியாக ஆங்கியலேயர்களுக்குச் சென்று தற்போது லண்டனில் இருக்கிறது.

இந்தியாவுக்குச் சொந்தமான விலை மதிக்கமுடியாத கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டது என்று, அது மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என இந்தியர்கள் பலரும் இதை உணர்ச்சிபூர்வமாக அணுகுகின்றனர்.

இந்நிலையில், அனைத்து இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு, லண்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு ஏப்ரல் 21ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இங்கிலாந்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டுவர உச்சநீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என்று திகைப்பில் இருக்கிறோம். இந்த மனுவை தாக்கல் செய்துள்ள தொண்டு நிறுவன மனுதாரர், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து அரசு ஏலம் விடாது என்றும் தெரிவித்துள்ளார். அதனால், நாங்கள் இங்கிலாந்து அரசிடம் ஒரு பொருளை ஏலம் விடுங்கள் என்று சொல்லமுடியுமா? இதற்கு, இந்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

அப்போது, இந்தியாவுக்குச் சொந்தமான கோஹினூர் வைரத்தை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று அரசுத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. மத்திய அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் லண்டனிலிருந்து கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவது தொடர்பாக இங்கிலாந்து அரசிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பாக, பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கேபினட் அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா ஆகியோர் கலந்துகொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்களின்படி இங்கிலாந்திலிருந்து கோஹினூர் வைரம் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்துள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கோஹினூர் வைரம் தொடர்பாக மே மாதம் இங்கிலாந்து அரசை அணுக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகைதந்த இங்கிலாந்து பிரதமரிடம் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘இங்கிலாந்து கோஹினூர் வைரத்தை திரும்ப அளிக்க ஒப்புக்கொள்ளுமானால், நீங்கள் இங்கிலாந்தின் மியூசியம் வெறுமையாகியிருப்பதை உணர்வீர்கள்’ என்று கூறினார். இதிலிருந்து இங்கிலாந்து அரசு கோஹினூர் வைரத்தை திரும்ப அளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று அறிய முடிகிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon